மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு மேல்மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயப்படுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த ஆசிரியர்களைத் தவிர, ஏனையவர்கள் பாடசாலைகளுக்கு கட்டாயப்படுத்தி அழைக்கப்பட்டால், அது குறித்து தமக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கேள்வி - மேல் மாகாணத்தில் சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக இன்றைய தினம் பாடசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் மீள திறக்கப்படுவது தொடர்பான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில் - கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. 907 பாடசாலைகளில் சுமார் 79,000 மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு சமுகமளிக்கின்றனர். கொவிட்-19 தொற்று நிலை மேல் மாகாணத்தில் அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
பாடசாலை மாணவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பாடசாலை மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். ஆனால் மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒரு முகக்கவசத்தையேனும் அரசாங்கம் வழங்கவில்லை. மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்காகவேனும் ஒரு முகக்கவசத்தையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேநேரம் கைகளை கழுவுவதற்கும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கிருமி தொற்றி நீக்கும் செனிடைஸர்களை வழங்குவதற்குகூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை பாடசாலையில் உள்ள நிதியில்தான் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி - இன்றைய தினம் மேல் மாகாணத்தில் பாடசாலைகளுக்கு கடமைக்கு சமுகமளிக்கும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறு உள்ளது?
பதில் - மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிகளவான ஆசிரியர்கள்தான் மேல்மாகாணத்தில் கடமையாற்றுகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்தான் மேல் மாகாணத்தில் அதிகளவில் கடமையாற்றுகின்றனர்.
கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையின் பிரகாரம் 11 ஆம் தரத்திற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்குவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு செல்ல முடியாது என்றும், வெளிப்பிரதேசங்களில் இருந்து மேல்மாகாணத்திற்கு வர முடியாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சில பாடசாலைகளின் அதிபர்கள் ஏனைய பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பதற்கு வற்புறுத்துவதாக எங்களுக்கு தெரிய வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கொவிட்-19 தொற்று இருக்கின்ற சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை மீறி செயற்படுகின்றபோது, அதற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும்.
கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்;த ஆசிரியர்களைத் தவிர, ஏனையவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க தேவையில்லை என ஆசிரியர்களிடம் நாங்கள் கூறுகின்றோம். அவ்வாறு பிரச்சினை ஏற்படுமாயின் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு அறிவிக்குமாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.