ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட 27 இலங்கையர்கள் மியன்மாரிலிருந்து மீட்பு
ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட 27 இலங்கையர்கள் மியன்மாரிலிருந்து மீட்பு.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன், இணையத்தள குற்றவியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு மியான்மரில் ஆட்கடத்தலுக்கு ஆளான 27 இலங்கையர்களை வெற்றிகரமாக திருப்பி அனுப்பியுள்ளது.
அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் உயர் அதிகாரிகள், 27 இலங்கையர்களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2024 டிசம்பர் 16 அன்று வரவேற்றனர்.
தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் பாங்கோக்கில் உள்ள தூதரக அதிகாரிகள் தாய்லாந்தின் மேசோட் எல்லையில் நவம்பர் 25 அன்று பாதிக்கப்பட்டவர்களை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் பாங்கோக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் வரை தங்குமிடம் வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) சகல ஏற்பாட்டியல் ரீதியிலான உதவிகளையும் வழங்கியது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியை, தாய்லாந்து மற்றும் மியான்மாரில் உள்ள இலங்கைத் தூதுவர்களுடன், ஒருங்கிணைத்திருந்தது. கடத்தப்பட்ட இலங்கையர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்திய வணக்கத்துக்குரிய மாளிகாவில அஸ்ஸஜி தேரரும் இச்செயன்முறையில் முக்கிய பங்காற்றினார்.
மியான்மாரின் மியாவாடி பகுதியில் சிக்கியுள்ள, எஞ்சியுள்ள இலங்கையர்களை விரைவில் மீட்டு, நாட்டுக்கு அழைத்து வருவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு இடைவிடாது செயற்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசுகளுக்கும், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட இச்செயன்முறையில் ஈடுபட்ட ஏனைய தரப்பினருக்கும் அவர்கள் ஆற்றிய உதவிகளுக்கு, தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் போது ஆட்கடத்தல் திட்டங்களுக்கு பலியாக வேண்டாம் என்று அமைச்சு பொதுமக்களைக் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கிறது. அரசாங்கத்தால் இச்செயன்முறை தொடர்பில், அங்கீகரிக்கப்பட்ட சகல நடைமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் (SLBFE) தங்களுடைய வேலை வாய்ப்புகள் அல்லது சலுகைகளை சரிபார்க்குமாறும் இலங்கையர்களுக்கு அமைச்சு அறிவுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு