53,000 பட்டதாரிகளுக்கும் ஒரே தடவையில் நியமனம் வழங்க கோரிக்கை

53,000 பட்டதாரிகளுக்கும் ஒரே தடவையில் நியமனம் வழங்க கோரிக்கை

53,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கும் ஒரே தினத்தில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் கோரியுள்ளது.



ஒரு வருட கால பயிற்சிக்காக ஆட்சேர்க்கப்பட்ட 53,000 பயிலுனர் பட்டதாரிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நியமனம் வழங்குவதற்காக மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தி, ஒரே தினத்தில் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஒன்றிணைந்து சேவை பணிப்பாளர் நாயகத்திடம் நேற்றுமுன்தினம் (20) எழுத்துமூலம் கோரியுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அனைவரையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயிற்சியில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அவர்களை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பது ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய பயிற்சிக்காக ஆட்சேர்க்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆகும்போது பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்த தரப்பினர் இதுவரையில் நிரந்தரமாக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி நிரந்தர நியமனம் வழங்குவதற்கும் எஞ்சியவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைவரையும் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் மூன்று கட்டங்களாக ஆட்சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் ஒரே தினத்தில் நிரந்தர நியமனம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் செயற்பட்டால் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image