“ஒன்றுபடுவோம்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முதலீடு செய்யுங்கள்”

“ஒன்றுபடுவோம்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முதலீடு செய்யுங்கள்”

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது.

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரசார செயல்பாட்டின் 16 நாட்கள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு சர்வதேச பிரசாரமாகும்,.

இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதியுடன் நிறைவடைகிறது.

1991 ஆம் ஆண்டு பெண்ணிய ஆர்வலர்களினால் இப் 16 நாட்கள் பிரசார செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் இல்லாதொழிக்கவும் நோக்காக கொண்டு உலகளாவியரீதியில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை ஒழுங்கமைக்கும் ஒரு உத்தியாக இந்த பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் பிரசார செயற்பாடு பயன்படுத்தப்படுகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பொதுவான மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். உலகளவில், 736 மில்லியன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உடல் அல்லது பாலியல் வன்முறை அல்லது இரண்டையும் அனுபவிக்கின்றனர்.

பெண்கள் உரிமை ஆர்வலர்கள் 1991 ஆம் ஆண்டு முதல் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான நாளாக நவம்பர் 25 ஐ அனுசரித்து வருகின்றனர்

டிசம்பர் 20, 1993 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பிரகடனத்தை 48/104 தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டது, இது உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை அகற்ற வழி வகுத்தது. இறுதியாக, பிப்ரவரி 7, 2000 அன்று, பொதுச் சபை 54/134 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, நவம்பர் 25 ஐ வன்முறைக்கு எதிரான சர்வதேச தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

“ஒன்றுபடுவோம்! பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முதலீடு செய்யுங்கள்” என்பது 2023 ஆம் ஆண்டுக்கான தினத்தின் தொனிப்பொருளாகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரஜைகள் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் காட்டவும், பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாத உலகத்தை உருவாக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த பிரசாரம் அமைகின்றது. அத்துடன், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எவ்வாறு முதலீடு செய்கின்றன என்பதைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்த ஆண்டு பிரசாரம் அழைப்பு விடுக்கிறது.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளின் பின்னணியில் இந்த ஆண்டு இந்த தினம் அனுட்டிக்கப்படிகிறது. இலங்கை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் தரவுகளின்படி, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 10-15 முறைப்பாடுகள் நாளாந்தம் பொலிஸ் நிலையங்களில் பதிவாகின்றன. பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமிகள் தங்கள் காதலன், தந்தை, சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் அல்லது தாயின் பிரிந்த கணவரால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வழக்குகள் குறித்து முறைப்பாடு செய்யும் போக்கு உள்ளதாக அறியமுடிகிறது.

அண்மைக்காலச் சூழலைக் கருத்தில் கொண்டாலும், இந்தக் குற்றச்செயல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 10 பேர் கர்ப்பம் தரித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, அண்மையில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுபோன்ற நிலைமைகள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்வியை எழுப்புவதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்தும் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இந்தகைய அபாய நிலையை ஒழித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தவும், அவர்களின் எதிர்கால பாதுப்பை உறுதிப்படுத்தவும், ஒன்றிணைந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறயை ஒழிக்க அனைவரும் அணிதிரள்வதே காலத்தின் கட்டாயமாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image