செப்டம்பரில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கருத்தரிப்பு!

செப்டம்பரில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கருத்தரிப்பு!

சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கருத்தரித்துள்ளமை குழுவில் தெரியவந்தது

2021ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பிலும் இந்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டிய கொள்கை தொடர்பில் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனநாயகத்துக்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) உள்ளடங்கலாக இந்நாட்டின் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் விசேட கலந்துரையாடல் 2023.11.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குறித்த குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முன்மொழிவுகளில் குறைவாகக் கவனம் செலுத்தப்பட்ட பல பகுதிகள் குறித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பில் கவனம் செலுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பெண்களின் நலனில் கவனம் செலுத்தாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்தனர். பாடசாலை மாணவியர் எதிர்கொள்ளம் சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாகவும் குழுவில் தெரியவந்தது. அதனடிப்படையில், குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது மிகவும் அவசரமான தேவை எனச் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நாட்டில் முதியோர் பராமரிப்புக்கான விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமெனவும் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. உளநல மேம்பாடு தொடர்பான பழமையான சட்டத்தில் திருத்தம் செய்து காலத்துக்கு ஏற்ற வகையில் அதனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சந்திம வீரக்கொடி,  மயந்த திஸாநாயக்க,  ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும், வீரசுமண வீரசிங்க தலைவரின் அனுமதியுடனும் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image