அதிபர் ஆசிரியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

அதிபர் ஆசிரியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டும் வகையில் எதிர்வரும் 25ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அதிபர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கிவருகின்றது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லுவதற்கு மிகவும் கஷ்டப்படும் நிலையும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வாக மாணவர்களை அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதோடு, ஆசிரியர்களையும் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு வழங்குமாறும் அல்லது வேறு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் 2022.04. 20 திகதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு பாடசாலைக்கு வருகை தருவதற்கான போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வினை வழங்க கோரி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் அனைவரும் 2022 ஏப்பிரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image