''கூட்டு ஒப்பந்தம் இல்லை என்பதால் தொழிலாளர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்கள்''

''கூட்டு ஒப்பந்தம் இல்லை என்பதால் தொழிலாளர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்கள்''

·கூட்டு ஒப்பந்தம் தற்போது இல்லை என்பதால், பெருந்தோட்ட நிறுவனங்கள் சில தொழிலாளர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்களை வழங்குவதாகத் தெரிவித்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தற்போதுப் பிரச்சினையாகியுள்ள மேலதிகக் கொழுந்து விவகாரம் தொடர்பில், தொழிலாளர்களும் பெருந்தோட்ட நிறுவனங்களும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென அரசாங்கம் விரைவில் அறிவித்தலொன்றை விடுக்குமெனவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் தமிழ்மிரருக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்க வேண்டுமென அரசாங்கம் கூறியபோது, அதற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் சட்டநடவடிக்கைகளில் இறங்கியதாகவும், இதன்போது அரசாங்கம் சட்டஆலோசனைகளைப் பெற்று, நீதிமன்றத்தினூடாகவே ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

கூட்டு ஒப்பந்தம் இல்லை என்பதால், பெருந்தோட்ட நிறுவனங்கள் சில மேலதிகமாக 20 கிலோ தேயிலைக் கொழுந்தைப் பறிக்க வேண்டுமென தொழிலாளர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்தார்.

சில பெருந்தோட்டங்களில் 20 கிலோ தேயிலையை நாளொன்றுக்குள் பறிப்பதில் பிரச்சினைக் காணப்படுவதாகவும், எனினும் சில தோட்டங்களில் 20 கிலோ விட அதிகளவானக் கொழுந்துகளைப் பறிக்கக்கூடிய நிலைமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலதிகக் கொழுந்து விவகாரத்தில் தொழிலாளர்களும் பெருந்தோட்ட நிறுவனங்களும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் விரைவில் அரசாங்கம் அறிவித்தலொன்றை விடுக்க உள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

மேலதிகக் கொழுந்து விவகாரத்தில், அரசாங்கம் என்றவகையில் வேறு எதனையும் செய்ய முடியாதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஸ் பத்திரண, பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் சுமூகமான முறையில் செயற்பட வேண்டுமெனவும், பெருந்தோட்ட நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும் வகையில் தொழிலாளர்களும் செயற்பட வேண்டுமென்பதைத் தொழிலாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

அவ்வாறில்லை என்றால் பெருந்தோட்டத்துறைக்கும் குறிப்பாக தொழிலாளர்களுக்கும் இது பாதகமாக அமையுமெனவும் அறிவுறுத்திய அவர், அனைவரும் ஒன்றிணைந்து சுமூகமாகச் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

பா. பா.நிரோஸ் முகநூல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image