முகாமைக்கு எதிராக போராடும் தோட்டத் தொழிலாளர்கள்

முகாமைக்கு எதிராக போராடும் தோட்டத் தொழிலாளர்கள்

தலவாக்கலை பிரதேசத்தில் அமைந்துள்ள ட்றூப் மற்றும் கொரின் தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 22.04.2021 வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்படடனர்.

ரூபா 1000 சம்பளம் வழங்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளரகள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் வழங்கப்படுமாயின் அன்று 50 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ட்றூப் மற்றும் கொரின் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட தொழிற்ச்சாலைக்கு முன்பாக காலை 07 மணி முதல் காலை 10 மணி வரை சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.சக்திவேல் குறித்த தோட்ட முகாமையளருடன் இவ்விடயம் சம்பந்தமாக கலந்துரையாடி தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுக்கொடுத்ததையடுத்து தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை செய்து வருகின்றது. தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கும் தேயிலை கொழுந்தின் நிறைக்கும் சம்பந்தம் கிடையாது என பி.சக்திவேல் தெரிவித்தார்.

அவர்களுக்கு இவ்வளவு காலமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 16 கிலோ கொழுந்து பறித்தால் சம்பளம் வழங்கப்பட வேண்டும். வேலை நாட்களை குறைக்க இயலாது. வீணான கெடுபிடிகளை தொழிலாளர்களுக்கு விதிக்க வேண்டாம் என்றும் அவர் முகாமையாளிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image