சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.
10 டிசம்பர் 2024, உலகின் மிக அற்புதமான உலகளாவிய உறுதிமொழிகளில் ஒன்றான மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) 76வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - இந்த முக்கிய ஆவணம் ஒரு மனிதனாக அனைவருக்கும் உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமைகளை உள்ளடக்கியது.
"எமது உரிமை, எமது எதிர்காலம், இப்போது" என்பது இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும்.
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால், டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
அனைவரும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்த நாள் உணர்த்துகின்றது.
1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொணடது.
இதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான 16 நாட்கள் உலகளாவிய பிரசாரம், சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றுடன் நிறைவடைகிறது.
வருடாந்தம் நவம்வர் மாதம் 25 ஆம் திகதி இந்தப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, சர்வதேச ரீதியில், பெண் உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் 2024 முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ள செய்தியில்
அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், “எமது உரிமைகள், எமது எதிர்காலம், இதோ இப்போதிருந்து” என்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின கருப்பொருளுடன் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
இந்த கருப்பொருள் மனித உரிமைகளின் பாதுகாப்பும் மேம்பாடும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவதற்கான இலட்சியங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிகழ்காலத்திற்கு மிகவும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு நீதியான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கின்ற அதேநேரம், இது அனைவருக்கும் கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் செழித்தோங்கும் ஒரு எதிர்காலத்திற்கான அடிப்படையாகும்.
இந்த உலகளாவிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் நீதி மற்றும் வாய்ப்புகளை உத்தரவாதம் செய்யும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை இந்த சிறப்புவாய்ந்த நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால், அனைவரினதும் மனித உரிமைகளை மதிக்கும், பாதுகாக்கும் மற்றும் கொண்டாடும் புதியதோர் உலகை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். - எனத் தெரிவித்துள்ளார்.