முன்மொழியப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான TISL இன் பரிந்துரைகள்

முன்மொழியப்பட்ட தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் மீதான TISL இன் பரிந்துரைகள்

தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும் தகவல்களின் ரகசியத்தன்மையை பராமரிக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதற்காகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது

Transparency International Sri Lanka (TISL)  தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஐந்து முக்கிய பரிந்துரைகள் தொடர்பில் சட்டமன்றக் குழுவின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உள்ள பிரஜைகளுக்கு தகவல் ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கான சட்ட கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது நிச்சயமாக மனித உரிமைகளை வென்றெடுக்கும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும்.

பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காகவும் அவற்றை பொறுப்புடன் பராமரிப்பதற்காகவும் ஒரு பொறிமுறையை அமைப்பதற்காக அயராது உழைத்த சகல தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்த மசோதாவின் மிகச் சிறந்த சட்ட அமுலாக்கத்திற்காக மீள் பரிசீலிக்கப்பட வேண்டிய ஐந்து பிரதானமான விடயங்களை TISL நிறுவனம் பரிந்துரைக்கிறது.

1. தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விட மேலோங்கும் பட்சத்திலும் இரண்டு சட்டங்களுக்கிடையேயான முரண்பாடுகளை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் விதிவிலக்குகளை உள்ளடக்குதல்.

2. சட்டத்தின் பிரதான நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சுயாதீன தரவு பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை நிறுவுதல்.

3. தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படும் ‘தனிப்பட்ட தரவு” என்பதனை வரைவிலக்கணம் செய்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் தொடர்புபடுத்தல் ஆகும். இதனூடாக ஏதேனும் தனிப்பட்ட தரவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளும் போது அது தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்துடன் முரண்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

4. நிதிசார் தகவல்கள் மற்றும் குற்றவியல் குற்றங்கள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தினூடாக குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் தகவல்கள் ‘தனிப்பட்ட தரவுகளின் விசேட வகைப்படுத்தலின் கீழ் நீக்குதல். இதனூடாக ஊழல் உள்ளிட்ட பிற குற்றங்கள் தொடர்பான தகவல்களை பிரஜைகள் அணுகுவதற்கான சந்தர்ப்பங்களை இது பாதுகாக்கின்றது.

5. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு திட்டத்தில் ‘ஊடகவியலாளர்களின் நோக்கத்திற்காக” தனியான நிபந்தனை ஒன்றை உள்ளடக்குதல். ஊடகவியலாளர்கள் தமக்கான தகவல்களை அணுகுவதை தேவையின்றி தடுப்பதை இந்த பரிந்துரை உறுதி செய்கிறது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கண்ட பரிந்துரைகளை உள்ளடக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சட்டத்தரணி நதீஷானி பெரேரா அவர்கள், குறிப்பிடுகையில், “தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைக்கு ஏதேனும் கட்டுப்பாடு ஏற்படுமாயின், இந்த இரண்டு சட்டங்கள் தொடர்பிலும் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் உள்ளது, மேலும் சட்ட அமுலாக்க நிறுவனங்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது, எனவே இந்த இரண்டு சட்டங்களின் நோக்கங்களையும் அடைய முன்மொழியப்பட்ட சட்டம் திருத்தப்பட வேண்டியது அவசியம்”. என அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பின் போர்வையில் பிரஜைளின் தகவல் அறியும் உரிமையை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தடுப்பதன் முக்கியத்துவத்தை TISL நிறுவனம் மேற்கூறிய பரிந்துரைகள் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.

மேலும், இச்சட்டத்தின் மூலம் தொடர்புடைய சட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்குத் தேவையான மற்றுமொரு முக்கியமான காரணி தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் செல்வாக்குமின்றி பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக செயற்படக்கூடிய ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதே ஆகும்.

TISL நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட இந்த சட்ட மீளாய்வு அறிக்கையானது சட்ட வரைவுக் குழுவின் கவனத்திற்காக, சட்ட வரைஞர் திணைக்களத்தின் தலைவி தில்ருக்ஷி சமரவீர மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான வரைபுக் குழுவின் தலைவர் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோரின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவுச் சட்ட மூலமானது 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சட்ட வரைவுக் குழுவினால் தயாரிக்கப்பட்டு, சட்டவரைஞர் திணைக்களத்தினால் 2019 டிசம்பர் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2020 ஜனவரி மாதத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது. இறுதியாக, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவுச் சட்ட மூலமானது சட்டமா அதிபரிடம் மீளாய்வுக்காக பரிந்துரைக்கப்பட்டதுடன், சட்ட வரைவுக் குழுவினால் சட்டமா அதிபரின் பதிலளிப்புக்கள் உள்ளடக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்ட வரைவு செயன்முறைகள் 2020 அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.

ஒரு ஜனநாயக நிர்வாக கட்டமைப்பிற்குள் தகவல்களை அணுகவும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு. எனவே, இது தொடர்பான சட்ட வரைவுகளை உருவாக்குகையில், சகல பிரஜைகளினதும்

உரிமைகளுக்குமிடையில் சட்ட ரீதியான முரண்பாடுகள் எதுவுமில்லாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு TISL நிறுவனம் உரிய நிறுவனங்களை வலியுறுத்துகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image