பாடசாலைகளில் சமூகத் தொற்று ஏற்படின் வலயக்கல்விப்பணிப்பாளரே பொறுப்பு!

பாடசாலைகளில் சமூகத் தொற்று ஏற்படின் வலயக்கல்விப்பணிப்பாளரே பொறுப்பு!

பாடசாலை மட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அட்டன் வலயக்கல்வி பணிப்பாளரே ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாடசாலை மட்டத்தில் சமூகத்தொற்றாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அட்டன் கல்வி வலய பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியிலும் அட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் கட்டாயமாக வர வேண்டும் என வலயக்கல்வி பணிப்பாளர் உத்தரவிட்டிருப்பதுடன் அவ்வாறு வராமலிருக்கும் ஆசிரியர்களின் வேதனத்தை நிறுத்தும் படி அதிபர்களுக்கும் அவர் உத்தரவிட்டிருப்பதாக ஆசிரியர்கள் எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர்..

வெலிஓயா பகுதியில் தண்டுகலா தோட்டப்பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பிரதேசத்திலிருந்து ஆசிரியர்கள் நகர பாடசாலைகளுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என அதிபர்கள் கண்டிப்பாக கூறுகிறார்கள். இது தொடர்பில் அதிபர்களிடம் கேட்டால் வலயக்கல்வி பணிப்பாளரின் உத்தரவின் படி நடக்க வேண்டும் என்கின்றனர்.

கொரோனா தொற்று அபாயத்தினால் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் மூடப்பட்டதற்கான பொறுப்பை இவர்களே ஏற்க வேண்டும். தொற்றாளராக இனங்காணப்பட்ட நோர்வூட் த.ம.வி ஆசிரியை நான்கு மாத குழந்தையின் தாயாவார் அவர் சுகவீனமுற்ற நிலையிலும் பாடசாலைக்கு வருகை தரும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றார். தனது வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டே அவர் பாடசாலைக்கு வந்திருக்கின்றார். ஆனால் இப்போது நடப்பது என்ன?

தொற்று நீக்கம் செய்த பிறகு நான்கு நாட்களுக்குப் பின்னர் பாடசாலையை திறக்கப்பட்டு அனைவரும் வருகை தர
வேண்டும் என பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் . ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் அந்த பிரிவு ஆசிரியர்கள் கட்டாயம் வருகை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறான சர்வாதிகார போக்குகள் இலங்கையில் அட்டன் கல்வி வலயத்தில் மட்டுமே இடம்பெறுகின்றது.

இது குறித்து அரசியல் பிரமுகர்கள் கேள்வி எழுப்புவதில்லை. ஏனென்றால் இங்கு கல்வித்துறையில் அரசியல் நியமனங்களே அதிகமாகும். முடக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிடுவது எல்லாம் அறியாமையின் விளைவாகும். மட்டுமன்றி நெருக்கடியான நேரத்தில் பாடசாலைகளை
இயங்க வைத்தோம் என்ற பெயரை போட்டுக் கொள்வதற்கு செயற்படும் கல்வி அதிகாரிகள் வரவிருக்கும் ஆபத்தை உணராமலிருப்பது விசனத்துக்குரியது.

மேற்படி கல்வி வலயத்தின் ஆசிரியர்களும் அதிபர்களும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். நாம் இது குறித்து மாகாண செயலாளரிடமும் ஆளுநரிடமும் பேச்சு நடத்த தயாராகின்றோம். பாடசாலை மட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அட்டன் வலயக்கல்வி பணிப்பாளரே ஏற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image