PAYE Tax ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை இந்த மாதத்திலேயே

PAYE Tax ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மை இந்த மாதத்திலேயே

உழைக்கும் போதே செலுத்தும் வரியை (PAYE Tax) குறைத்ததால் ஊழியர்களுக்கு கிடைக்கும் நன்மையை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொடுக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ஜனவரி மாதத்தில் அதிகளவு வரிப்பணம் வெட்டப்பட்டிருந்தால் இந்த மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய வரியிலிருந்து அதனைக் குறைப்பதற்கும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் ஊழியர்களிடமிருந்து அறவிடப்பட்ட உழைக்கும் போதே அறவிடும் வரியை திருத்தம் செய்ததால் இந்த நன்மையை அவர்களுக்கு பெப்ரவரி மாதத்தில் பெற்றுக் கொடுப்பதே திணைக்களத்தின் கருத்தாக உள்ளது. 

 
உதாரணமாக ஜனவரி மாதத்தில் 1000 ரூபா மேலதிகமாக செலுத்தியிருந்தால் பெப்ரவரி மாதத்தில் செலுத்த வேண்டியது பத்தாயிரம் ரூபாவாக இருந்தால் இந்த மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் அறவிடப்படுமென திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெளிவு படுத்தினார். 
 
முதலாளிகளால் வழங்கப்படும் குடியிருப்பு கொடுப்பனவு, உத்தியோகபூர்வ இல்லம், போக்குவரத்து வசதி, தொடர்பாடல் வசதி, தொலைபேசி கட்டண கொடுப்பனவு உள்ளிட்ட பல பிரிவுகளுக்காக புதிய வரித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதன்படி, நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு வாகனமொன்றை பெற்று கொடுக்கும் போது எஞ்சின் கொள்ளளவுக்கு அமைய ஐம்பதாயிரம் ரூபா அல்லது எழுபத்தையாயிரம் ரூபா வரியாக செலுத்த வேண்டியிருந்தது.
 
ஆனால்இ புதிய திருத்தத்தின்படி என்ஜின் கொள்ளளவை கருத்தில் கொள்ளாது வாகன கொடுப்பனவு 20,000 ரூபா, சாரதிக்கான கொடுப்பனவு 10,000 ரூபா மற்றும் எரிபொருளுக்கு 24,000 ரூபா வரிக்கு உட்படுத்தப்படும்.

ஊழியர் ஒருவரின் தனிப்பட்ட வாகனத்தை நிறுவனம் உபயோகப்படுத்தப்படுமானால் அவருக்கு வழங்கப்படும் எரிபொருள், சாரதி மற்றும் வாகனத்துக்கான கொடுப்பனவில் 100% முன்னர் வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் புதிய திருத்தத்தின்படி அந்த வரியை செலுத்த வேண்டியது கொடுப்பனவின் 25 வீதத்துக்காகுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image