உரிய நேரத்தில் வன்முறையை தடுக்க தவறிய ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும்- FUTA

உரிய நேரத்தில் வன்முறையை தடுக்க தவறிய ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும்- FUTA

அகிம்சை முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதலை தடுக்க முற்படாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பொலிஸ் மா அதிபர் சி. டி விக்ரமரட்ன பதவி விலக வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (09) நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவருடைய அலுவலகமும் இவ்வன்முறைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொஹான் லக்சிறி வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது, சாத்திவீகமான முறையில் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டுவந்த அரச எதிர்ப்பு போராட்டங்களின் மீது கடந்த 9ம் திகதி தநடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குல்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி வன்மையாக கண்டிக்கிறோம்.

தற்போது பதவி விலகியுள்ள பிரதமர் திரு.மகிந்த ராஜபக்சவும் அவரது அலுவலகமும் இந்த வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாக நாங்கள் கருதுகிறோம். அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு, காலி முகத்திடலில் உள்ளவர்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், அவர்கள் காலி முகத்திடலுக்குச் செல்வதற்கு சற்று முன்னர், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் தற்போது தனது பதவியை இராஜினாமா செய்துள்ள போதிலும், இந்த மக்கள் குழுவை 09ம் திகதி அலரி மாளிகைக்கு வரவழைத்து விருந்தளித்தது ஏன் என்பது அவர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கோருகிறோம்

அலரிமாளிகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்,தாக்குதல் நோக்கத்திற்காக மண்டபத்தைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தமை, அங்கு அவர்களை அழைத்து வர பங்களிப்பு செய்தவர்களுடைய பெயர்களை வௌியிட கடமைப்புள்ளீர்கள். இந்த கூட்டத்தில் மற்றும் தாக்குதல் நடத்திய கும்பல்களில் சில அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதை சமூக மற்றும் வெகுஜன ஊடக அறிக்கைகள் அடையாளப்படுத்துகின்றன.

இந்த காட்டுமிராண்டித்தனமாக செயற்பாட்டை கட்டுப்படுத்த தவறிய ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வன்முறையைத் தூண்டியவர்களுக்கு எதிராக அவர்களின் சமூக அல்லது அரசியல் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினர் மற்றும் ஆயுதப்படையினரின் நடத்தை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

“பாரிய அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் எமது அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்டித்து சுதந்திரமாக செயற்பட்டு அதன் ஆணையை நிறைவேற்றியமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image