மலையகத் தமிழரின் அடையாளம் குறித்து அமைச்சர் சாவித்ரி வெளியிட்ட கருத்து

மலையகத் தமிழரின் அடையாளம் குறித்து அமைச்சர் சாவித்ரி வெளியிட்ட கருத்து

இலங்கையில் மலையக வாழ் தமிழ் மக்கள் குடியேறி நான்கு தலைமுறைகளை கடந்து, 200 வருடங்களாயினும் இதுவரை காலப்பகுதியிலும் பிறப்பு சான்றிதழில் 'இந்திய தமிழர்' என்றே எழுதப்படுகிறது.

ஆனால் இலங்கையில் வாழும் மலையக மக்கள் இலங்கையிலே வியர்வை சிந்தி இலங்கைக்காக உழைத்து இன்று தன்னுடைய நாடு என்ற அங்கீகாரம் இல்லாமல் வாழ்வது மாற்றமடைந்து, இலங்கையர் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

இரா. சிவலிங்கம் ஞாபகார்த்தம் குழுவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (14) கொழும்பு தமிழ் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வாழ் மலையக மக்களை இலங்கை இதுவரை இலங்கையர் என்று உள்வாங்கவில்லை என்பது அவர்களது ஆதங்கமாக உள்ளது. இந்தியாவிலிருந்து கைவிடப்பட்ட ஒரு சமுதாயம் என்பதனால் அயல் நாடாக இருந்தாலும் மூதாதையர் வாழ்ந்த நாடாக இருந்தாலும் இந்தியா என்ற நாட்டுக்குள் பொருளாதார ரீதியாகவும் நிருவாக ரீதியாகவும் மலையக வாழ் தமிழ் மக்கள் மீது பொறுப்புணர்ச்சியினை அறிந்துகொள்ளும் தன்மை இந்திய அரசாங்கத்துக்கு கிடையாது.

எனவே, மலையக வாழ் தமிழ் மக்கள் குடியேறி நான்கு தலைமுறைகளை கடந்து 200 வருடங்கள் ஆகிவிட்டபோதும் இலங்கையிலே வியர்வை சிந்தி இலங்கைக்காக உழைத்து இன்று தன்னுடைய நாடு என்ற உரிமை இல்லாமல் வாழ்கின்ற நிலையில், இந்திய வம்சாவளி என்பது மாற்றமடைந்து இலங்கையர் என்ற அங்கீகாரம்  மலையக வாழ் தமிழ் மக்களுக்கு உரிமையாக வழங்கப்படவேண்டும்.

மலையக வாழ் தமிழ் மக்களினதும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களினதும் வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகிறது.  

உதாரணமாக காணிப் பிரச்சினைகள், கல்வி பிரச்சினைகள், வீடமைப்பு பிரச்சினைகள் மற்றும் உரிமைகோரலுக்கான பிரச்சினைகள் ஆகியன முற்றிலும் வேறுபட்டவையாகவே காணப்படுகின்றதுடன் இவ்வாறான பிரச்சினைகளை ஆராய்ந்து, ஆதாரபூர்வமாக தீர்வுகளை பெறவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

ஒவ்வொரு சமுதாயத்துக்குமான அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளங்களை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பொதுவாக இந்த நாட்டு அனைத்து மக்களுக்கிடையிலும் காணப்படும் விசித்திரமான அவர்களது விழுமியங்களையும் சமூக அடையாளங்களையும் பாதுகாக்கவேண்டியது எமது எல்லோரது பொறுப்பாகும்.

மலையக மக்கள் நல்லபடியாக வாழ்கின்றார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது. ஆகவே மலையக மக்களுக்கான வீட்டுரிமை மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எமது அரசாங்கத்தின் ஊடாக  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image