டிஜிட்டல் பொருளாதாரம் என்பது தெரிவு அல்ல தேவையாகும்

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது தெரிவு அல்ல தேவையாகும்

டிஜிட்டல் பொருளாதாரம் என்பது தெரிவு மாத்திரமல்ல அது தேவையாகும் என்றும் அதற்காக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒரு நாடு என்ற வகையில் தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைய சிறிது காலம் தேவை என்றும், கல்வி மற்றும் சந்தை மூலோபாயம் ஆகிய துறைகளில் உள்ள சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி பங்குதாரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற INFOTEL தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நவீன இலங்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் படி “டிஜிட்டல் பொருளாதாரத்தை உயிர்பிப்போம்” என்ற தொனிப்பொருளில், தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில் கூட்டமைப்பான ‘INFOTEL’ இன் ஏற்பாட்டில் தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி நவம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கலை பாடசாலைகளில் முன்னெடுக்கும் போது, ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சி அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்போது, தொழில்நுட்ப மற்றும் பட்டம் பெற்றதன் பின்னரும், பாடசாலைக்குப் பின்னரான காலத்திலும் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்தோடு, இலாப நோக்குடன் அல்லது இலாப நோக்கம் இன்றி தொழில்பயிற்சி பிரிவினர் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், பயிற்சி தொழிலாளர்களின் கேள்விக்கமைய அதற்கு அவசியமான நிறுவனங்களை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 16 பில்லியன் டொலர் சந்தை இலக்கை அடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு, சந்தை பிரவேசம் தொடர்பில் ஆழமாக சிந்தித்து, திட்டங்களை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உலகின் மிகப்பெரிய biometric அடையாள அட்டை முறைமையான ஆதார் (Aadhaar) அட்டைகளின் முக்கியத்துவத்தையும், இலங்கையின் டிஜிட்டல் புவிசார் தெரிவுக் கட்டமைப்புக்குள் அதனை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கைக்கு ஆதார் கட்டமைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் பயனாளிகளுக்கான நிதியைப் பகிர்ந்தளிக்கும் போது மேற்படி கட்டமைப்பின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image