விமானப் பயணங்களின் தாமதம் மற்றும் இரத்து தொடர்பில் விசேட அவதானம்

விமானப் பயணங்களின் தாமதம் மற்றும் இரத்து தொடர்பில் விசேட அவதானம்
விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்த்துவதற்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறியுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகைதரும் காலப்பகுதியில் விமானங்கள் தாமதமடைவது தொடர்பில் கவனம் செலுத்தம் வேண்டும் என வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தியுள்ளது.
 
விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்த்துவதற்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார்.
 
வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் நேற்று (04) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அத்துடன், பல்வேறு சவால்களை தாண்டி, பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இந்நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் காலப்பகுதியில் விமானங்கள் தாமதமடைவது சிக்கலுக்குரியது என நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
 
இது தொடர்பில் இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் பல தொழிற்சங்கங்கள் உள்ளதாகவும், பல்வேறு தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகளைக் காரணமாகக் கொண்டு தமது பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்தக் கலந்துரையாடலில் விசேடமாக விமானங்கள் தாமதமடைதல் மற்றும் எதிர்பாராத வகையில் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
 
அதற்கமைய, தற்பொழுது காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவற்றை நாட்டுக்கோ அல்லது நாட்டின் பொருளாதாரத்துக்கோ தாக்கம் செலுத்தும் வகையில் செயற்படக் கூடாது எனத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன், சிவில் விமான சேவை (திருத்தம்) சட்டமூலம் இதன்போது கருத்திற் கொள்ளப்பட்டதுடன் அதற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் இணக்கம் வழங்கப்பட்டது.
 
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க மற்றும் கௌரவ உதயகாந்த குணதிலக ஆகியோரும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image