அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி

ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

நேற்று முன்தினம் (02) காலை கேகாலை மாவட்ட செயலகத்தில் 100,000 அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டனர்.

மேலும் செய்தி அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின்படி நாட்டின் முழு அரச சேவையையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மிக வலுவான விரைவான அரச சேவையை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகுமென நிகழ்வில் கலந்துகொண்ட தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

Next Gen (அடுத்த தலைமுறை) திட்டம் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவாகும். டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வரவு செலவு திட்டத்திலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த யோசனையின்படி இன்று முதல் இப்புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதனை நிறைவு செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சில நிறுவனங்கள் ஏற்கனவே இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இப்பயிற்சித் திட்டம் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இப்பயிற்சித் திட்டம் ஐந்து நாள் நடத்தப்படும் திட்டமாகும், இது ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றலாம், சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்து இந்த நாட்டிலேயே அதே தொழிலில் பணியாற்றலாம். அத்துடன் உயர்தர கலை மாணவர்களுக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப பாடத்தை கற்பிக்கிறோம்.

அத்துடன் கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எம்மால் சம்பாதிக்க முடிந்தது அடுத்த ஆண்டு UDI என்ற திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

பிறக்கும் ஒவ்வொருவருக்கும் டிஜிட்டல் எண் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்கள் வளர்ந்து15 வயதாகும்போது தனித்தனி யுனிக் எண் வழங்கப்பட்டு, அவர்களின் உயிரியல் தரவுகள் ஒரே இடத்தில் சேமிக்கப்படும். அதன் மூலம் அடையாள அட்டை, கடவுச் சீட்டு உள்ளிட்ட பல சேவைகளை மேற்கொள்ள முடியும். டிஜிட்டல் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அவசர கல்வி சீர்திருத்தம் தேவை என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் வலியுறுத்தினார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image