பெருந்தோட்டக் காணிகள் பகிர்ந்தளிப்பதாக கூறுவது தேர்தல் கால வாக்குறுதி மாத்திரமே!

பெருந்தோட்டக் காணிகள் பகிர்ந்தளிப்பதாக கூறுவது தேர்தல் கால வாக்குறுதி மாத்திரமே!

 " பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக இருக்கும் என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.

அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டக் காணிகளை பகிர்ந்தளிப்பதாக கூறப்படுவது வெறும் தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே. அந்த யோசனை அமுலுக்கு வராது. . இத்திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்"  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 நுவரெலியா – ரதல்ல பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 குறித்த ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

 உரம் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவிப்புகளை விடுத்து வந்தாலும், அதற்கான வேலைத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை. அது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தவும் இல்லை. இது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.

 தோட்டங்கள் காடாகி வருகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாமும் ஏற்கின்றோம். ஏனெனில் களைக்கொல்லி மற்றும் புற்களை அழிக்ககூடிய மருந்துகள் இல்லை. தோட்டங்கள் காடாவதற்கு இதுவே காரணம். தோட்டங்கள் காடாகினால் கொழுந்து பறிக்க முடியாது. தற்போது 50 வீதமான தொழிலாளர்கள், இத்தொழியில் இருந்து வெளியேறியுள்ளனர். இரப்பர் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

 பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தோல்வி கண்ட பொறிமுறையாகும். பலரும் அது பற்றி கதைக்கின்றனர். ஆனால் பரீட்சாத்த நடவடிக்கைகூட தோல்வி கண்டுள்ளது. இதனை நாம் தேர்தல் கால வாக்குறுதியாகவே கருதுகின்றோம். அதனால்தான் இன்றளவில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.

 தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்கினால் அவர்கள் தேயிலை பயிரிடமாட்டார்கள். கிழங்கு, கரட் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளையே மேற்கொள்வார்கள். இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும். குறிப்பாக பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாகக்கூட இதனை பார்க்கலாம். பெருந்தோட்டத்துறையின் இருப்பை காக்க முடியாது என்பதே எமது மற்றும் தொழிலாளர்களின் கருத்தாகும்." - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image