இலங்கையில் உணவுப் பாதுகாப்பு பாதிப்பு - உலக உணவுத் திட்டம்

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு பாதிப்பு - உலக உணவுத் திட்டம்

இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் என்றும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம் நிலவுவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப் பகுதியில், 3.4 மில்லியன் இலங்கையர்களுக்கு உதவுவதற்குத் தேவையான 63 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 21.35 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் 6.3 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் அதிகமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உள்நாட்டு சந்தையில் விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளதுடன் சந்தையில் உள்ளூர் பொருட்களின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூலை மாதம் 60.8 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசர உதவி தேவைப்படும் 61,000 உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் பண உதவியை வழங்க உலக உணவுத் திட்டம் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image