'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' – ப்ரொடெக்ட்
'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' என்ற கோசத்தை முன்னிறுத்தி வீட்டுப் பணியாளர் தொழிற் சங்கமான 'ப்ரொக்டெக்' சங்கம் அட்டனில் மே தின ஊர்வலத்தையும் மக்கள் கருத்தாடலையும் முன்னெடுத்தது.
'ப்ரொக்டெக்' சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கருப்பையா மைதிலி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலமும் மக்கள் கருத்துரையாடலும் 'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' என்ற தொனிப்பொருளில் அட்டன் மல்லிகைப்பூ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் அட்டன் நகர் ஊடாக கருத்துரையாடல் மண்டபத்தை அடைந்ததும் அங்கு சம்பிரதாயபூர்வமாக மங்கள விளக்கேற்றல் நடைபெற்றதுடன் கருத்துரையாடல்களும் இடம் பெற்றன.
நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சினையால் வீட்டு வேலை தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கு பலராலும் கருத்துக்கள் பகிரப்பட்டன. தாம் தொழில் புரியும் வீடுகள் பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கான சம்பளத்தை அவர்களால் வழங்க முடியவில்லை. இதனால் எமது குடும்பங்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீட்டு வேலை என்பது இதுவரை முறைசாரா தொழிலாகவே காணப்படுவதால் தமக்கான நிரந்தர ஊதிய தொகை அற்ற நிலையில் குறைந்தளவு சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நாம் இன்றைய அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே தமது வீட்டு வேலைத் தொழில் முறைசார் தொழிலாக அங்கரிக்கப்பட்டு குறைந்தபட்ச சம்பளத்தொகை மற்றும் ஏனைய தொழில் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் கோரிக்கையை தாம் இந்த மே தினத்தில் முன் வைப்பதாக தெரிவித்தனர்.