ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட குழு நியமிப்பு

ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட குழு நியமிப்பு
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
ரம்புக்கனை பகுதியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், ஒருவர் பலியானதுடன்,  21 பேர் காயமடைந்த நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 11 பேர் காயமடைந்துள்ளதுடன், 10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.
 
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கண்டி - கொழும்பு ரயில் பாதையில் ரம்புக்கனை பகுதியில் தண்டவாளத்தை இடைமறித்து  நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
இந்தச் சம்பவம் குறித்து நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ,  இன்று காலை முதல் றம்புக்கணை நகரில், தொடருந்து வழித்தடத்தை இடைமறித்து, போராட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
 
அந்த இடத்திற்கு சென்ற டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை, தொடருந்து வழித்தடத்தின் குறுக்காக நிறுத்தி, அவர்கள் தொடருந்து பயணத்துக்கு இடையூறு விளைவித்துடன், பல்வேறு வகையிலும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸார், அவர்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து, கலைந்து செல்லலுமாறு தெரிவித்தனர். எனினும், போராட்டக்காரர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. பின்னர், அவர்கள் அந்த டீசல் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முயற்சித்தனர்.
 
அதேநேரம், முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீவைத்துடன், அந்த இடத்திலிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக, காவல்துறை கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டது. இதன்போது, குறித்த தரப்பினர் காவல்துறையினர் மீது கல்வீச்சுத் தாக்குதலை நடத்தினர்.
 
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறையினர் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, பொலிஸார் அங்கு நிலைகொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவத்தை அடுத்து ரம்புக்கனை பொலிஸ் அதிகார பிரதேசத்தில், நேற்றிரவு முதல் உடன் அமுலாகும் வகையில், மறு அறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ரம்புக்கனையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வௌிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார். ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என தமது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார
 
இதேவேளை, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய அலுவலகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக  ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். வன்முறையான செயற்பாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளைத் பாதிக்கிறது. பொதுமக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க தேவையான குறைந்தபட்ச அளவில் அதிகாரத்தைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image