மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை அமுலாக்க பரிந்துரை

மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை அமுலாக்க பரிந்துரை
அரச நிறுவனங்களில், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை அமுலாக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.


நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கை முழுவதும் நாளை (30) காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்குவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நிலைமை மேலும் மோசமாகி வருகிற்து. இதுகுறித்து பொதுமக்களும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எந்த நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஒழுக்கம் தொடர்பான பிரச்சனையால் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது. ஆனால் அந்த கப்பலை விடுவிப்பதற்கான டொலர் தற்போது இல்லை.

இந்த நிலையில், நாளையும் (30), நாளை மறுதினமும் (31) அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமை ஏற்படுத்தி, இந்த நிலைமையை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை முன்வைத்துள்ளோம். 10 மணிநேர மின்சாரத்தடை எனும்போது, மதிய நேரத்தில் முழுமையாக மின்சாரம் இல்லை.

இந்திய கடன் வசதி எல்லையில், எதிர்வரும் 31 ஆம் திகதியே மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது. முதலாம் திகதி தான் அந்தக் கப்பலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, அடுத்து வரும் சில நாட்களில் மிகவும் சிக்கலான நிலையிலேயே அனைவருக்கும் வாழவேண்டிய நிலை ஏற்படும். கூடிய அளவில் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை விநியோகிக்ககூடிய இயலுமை உள்ளது.

அதேநேரம், சுதந்திர வர்த்தக வலயத்திற்கு மின்சாரத்தை வழங்க முயற்சிக்கப்படுகிறது.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால், மீண்டும் மழையுடனான காலநிலை ஏற்படும் வரையில், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்து, முழுமையாக மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இல்லை.

இந்த நிலையில், அடுத்துவரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காவிட்டால், இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தாங்கள் அறியப்படுத்தி உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image