நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு - பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன

நாட்டின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு - பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன

இரசாயன உர தட்டுப்பாடுக்கு மத்தியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 21 மில்லியனால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

11.02.2022 நடைபெற்ற பெருந்தோட்டம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது, இரசாயன உரத் தட்டுப்பாட்டினால் மாத்தறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க சுட்டிக்காட்டிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேயிலை பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட இரசாயன உரங்களில் சில ஏனைய பிரதேசங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பெருந்தோட்ட அமைச்சர் தெரிவித்தார்.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து தேயிலை தோட்டங்களுக்கு நீர் விநியோகத்தை வழங்குவதற்கான செலவில் 50 வீதத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இரசாயன உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களுக்கு இயற்கை உரங்களை வழங்கும் முறையான செயற்பாட்டை அரசாங்கம் பேணுவது பொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, குழுவிடம் குறிப்பிட்டார்.

இதனிடையே, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

1,000 ரூபா பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட மறுத்த போதிலும், ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image