தனியார்துறை ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

தனியார்துறை ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

தனியார்துறைசார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ​தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (03) புதுவருடத்திற்கான அமைச்சின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விவசாயிகள், தொழிலாளர்கள் அரச மற்றும் தனியார் துறையினர் அனைவரும் இன்று கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இப்பொருளாதார பிரச்சினையானது எமது நாட்டின் திரைசேரியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு குறுகிய தீர்வுகள் இல்லை. நாடு, இனம் என்ற வகையில் இப்பிரச்சினையில் இருந்து வௌியேறுவதற்கு நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டிய கடமை பொறுப்பு உண்டு. எனவே நாம் புதிய முறையினை உள்வாங்கி வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

இந்நிலைமையை அரசியல் ரீதியாக விமர்சித்து, அரசியல் நன்மை பெற முயல்வது எதிர்கட்சியின் சாதாரண செயற்பாடு என்பதனால் அதனை குறை கூற முடியாது. எனினும் நாம் இந்த பொருளாதார பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினைப் பெற முயல்கிறோம்.

தனியார் துறையினருடைய சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த முன்மொழிவுகள் தொடர்பில் தற்போது தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் வழங்குநர்கள் மற்றும் அமைச்சு ஆகிய இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி வழங்கல் நடவடிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எமது நாட்டின் தொழிற்சட்டங்களை நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் தயாரிக்கவுள்ளோம். எனினும் அதனால் தொழிலாளருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட விடப்போவதில்லை. இந்த அரசாங்கத்தை நீக்கி வேறொரு அரசாங்கம் வந்தால் மாத்திரம் திரைசேரிக்கு பணம் வரப்போவதில்லை. அரசாங்கத்திற்கு பணம் கிடைக்கப்போவதுமில்லை. தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அவசியமான தேசிய திட்டமொன்றை வகுத்து அதனை செயற்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்விற்கு நாராஹேன்பிட்ட அபயராம விகாரை விகாராதிபதியும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image