போராட்டத்தின் அடுத்த கட்டம்? அகில இலங்கை அதிபர் சேவை தொழிற்சங்கம் அறிவித்தல்

போராட்டத்தின் அடுத்த கட்டம்? அகில இலங்கை அதிபர் சேவை தொழிற்சங்கம் அறிவித்தல்

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

அமைதிவழி போராட்டத்தை முடக்க அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என அகில இலங்கை அதிபர் சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடல் முன்பாக ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். தற்போதைய போராட்டத்திற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூறவேண்டும். 24 வருடகாலமாக தீர்க்கப்படாத சம்பள பிரச்சினைக்கு தற்போது தீர்வு பெற்றுக்கொள்ள உறுதியாகவுள்ளோம்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகோரி ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் நேற்று (நேற்று முன்தினம்) காலி முகத்திடம் முன்பாக போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடாரமிட்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். அமைதிவழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சர்வாதிகாரமான முறையில் தாக்குதலில் ஈடுப்பட்டார்கள். கூடாரங்களை உடைத்து கீழத்தரமான முறையில் செயற்பட்டார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. எமது சத்தியாக்கிரக போராட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து செல்லப்படும். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் இதுவரை வாய்ப்பு வழங்கவில்லை. ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என்றார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image