மலையக அபிவிருத்தி தொடர்பாக தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

மலையக அபிவிருத்தி தொடர்பாக தமிழக முதல்வருடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேற்றையதினம் (01) சந்தித்து கலந்துரையாடினேன்.

இச்சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்துவாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

அத்துடன் இலங்கையின் மலையகத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினேன்

மேலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு ,கல்வி,தொழில் வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்,தொடர்பான நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம்மக்களுக்கு அறிவித்துள்ள இந் நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது தெரிவித்ததோடு, இத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பரிந்துறைப்பதாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் தெரிவித்தேன்.

அதுமாத்திறமன்றி 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் மலையக தமிழர்களுடைய பிரஜா உரிமையானது பரிக்கப்பட்டது. அவ்வாறு பரிக்கப்பட்ட பிரஜா உரிமையானது 30 வருடங்களின் பின்னர் எங்களுடைய மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் பெற்றுக்கொடுக்கப்பட்டது என்பதனையும் நினைவுக்கூறினேன்.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையிலான உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்தேன்.

இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் எனவும் நம்பிக்கைகொள்கின்றேன். – எனத் தெரிவித்துள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image