ஜூலை மாதம் கொடுப்பனவு இல்லாமல் தடுமாறும் பட்டதாரி பயிலுநர்கள்!

ஜூலை மாதம் கொடுப்பனவு இல்லாமல் தடுமாறும் பட்டதாரி பயிலுநர்கள்!

2019 பட்டதாரி பயிலுநர் சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் ஜூலை மாத கொடுப்பனவு கிடைக்கவில்லையென அறிவித்துள்ளனர் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று (03) அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயிலுநர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்தல் 2019- திட்டத்தின் 1,2ம் கட்டங்களின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டு இதுவரை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அவர்கள் சேவையாற்றும் நிறுவனங்களில் நிரந்தர சேவைக்குள் உள்வாங்க உரிய அதிகாரிகள் தவறியுள்ளனர்.

பயிலுநர் பட்டதாரிகள் சேவையில் இணைத்தல் 2019 திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை இதுவரை நிரந்த சேவையில் இணைத்துக்கொள்ளாமையினால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேல் மாகாணம் உட்பட பல மாகாணசபைகளுக்குள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை நிரந்தர சேவைக்குள் உள்வாங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்காதுள்ளது. நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை மாதாந்தம் 20,000 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. எனினும் அவர்களுக்கான ஜூலை மாதம் கொடுப்பனவை வழங்குவதற்கு இயலாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்வாங்கப்படடுள்ள அபிவிருத்தி அதிகாரிகள் மேலதிக ஊழியர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கான உரிய சேவையிடம் இதுவரை வழங்கப்படவில்லை. அத்துடன் ஜூலை மாதம் தொடக்கம் அவர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாது என்றும் அவ்வமைச்சு அபிவிருத்தி அதிாரிகளுக்கு அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் உட்பட அனைத்து மாகாணசபைகளிலும் உள்வாங்கப்பட்ட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளை உடனடியாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவைக்குள் உள்வாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும 01.01.2021 ஆண்டு தொடக்கமான நிலுவை சம்பளத்தை வழங்கவும் உரிய நிருவாக நியமன விதிமுறைகளை செயற்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறும். மேலதிக ஊழியர்களாக கருதப்படும் சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image