ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை

ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்குமாறு ஆசிரிய உதவியாளர்கள் கோரிக்கை

நுவரெலியா மாவட்ட ஆசிரிய உதவியாளர்கள் மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரிய உதவியாளர்களில் 50 ஆசிரிய உதவியாளர்கள் இந்த சந்திப்பில் இணைந்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் தமது கோரிக்கை மகஜரில் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

2014-08-08 வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி, தாம் ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கு விண்ணப்பித்து 2014-12-28 தேர்வு பரீட்சை எழுதியதின் அடிப்படையில் தமக்கு 2015-05-19, 2015-09-12, 2016-02-19, 2016-05-16, 2018-05-16 ஆகிய திகதிகளில் கட்டம் கட்டமாக 3021 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெற்றது.

இந்த நியமனத்தின்போது ஐந்து வருட சேவைக்காலத்திற்குள் தாம் ஆசிரியர் பயிற்யை பூர்த்தி செய்ய வேண்டும் என தமக்கு கொடுக்கப்பட்ட நியதியின் அடிப்படையில் ஐந்து வருடங்களுக்குள் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்துள்ள நிலையில் தாம் இன்னும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்படவில்லை என்று இவர்கள் தெரிவித்தளர்.

ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களில் முதற் கட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டு விட்டனர். மேலும் இரண்டாம் கட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்த சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களும் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டபோதிலும் மத்திய மாகாணத்தில் கடமையாற்றும் 270 ஆசிரிய உதவியாளர்கள் இதுவரை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை என இவர்கள் தெரிவித்தனர்.

தாம் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மாதாந்தம் ரூபா 10000 ஊதியத்தில் சேவையாற்றுவதாகவும், இதனால் தாம் பொருளாதார நிலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது மத்திய மாகாணத்தில் கடமையாற்றும் 270 ஆசிரியர் உவியாளர்களாகிய தம்மை உடனடியாக ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கி தமக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று தாம் ஆளுநரிடம் கோரிக்கை மகஜரை கையளித்ததாக தெரிவித்தனர்;

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image