ஆசிரியர் - அதிபர் உரிமைப் போராட்டமும் அடுத்தக்கட்ட நடவடிக்கையும்

ஆசிரியர் - அதிபர் உரிமைப் போராட்டமும் அடுத்தக்கட்ட நடவடிக்கையும்
சம்பளப் பிரச்சினையைத் தீர்த்தல்,  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
 
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பேயணியா ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
 
மஹிந்த ஜயசிங்க
பொதுச்செயலாளர் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
 
mahi.jpg
 
24 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்குமாறுதான் நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.  கடந்த காலங்களில் நாங்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தோம். பல்வேறு போராட்டங்களை  முன்னெடுத்து இருந்தோம். ஆனால் இந்த ஆட்சியாளர்களின் கண்கள் திறக்கப்படவில்லை. இதுதான் யதார்த்த நிலையாகும். எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றுவதற்கு தான் இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். அதனால்தான் கடந்த 12ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு நாங்கள் தீர்மானம் மேற்கொண்டோம். 
 
இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவது என்பது அரசாங்கத்தினதும் அல்லது கல்வி அமைச்சினதும் நடவடிக்கை அல்ல. அது எங்களுடைய செயற்பாடாகும். நாங்கள் இலவசமாக சுயமாகவே அதனை மேற்கொண்டோம்.  அவ்வாறு நாங்கள் சுயமாக முன்னெடுத்த செயல்பாட்டை கண்காணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.  இந்த பலவந்தமான கண்காணிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதிபர் ஆசிரியர் சங்கங்கள் நாங்கள் அப்போது அரசாங்கத்திடம் கூறினோம்.  நாங்கள் தற்போது இந்த போராட்டத்தை முன்னெடுத்திருப்பது மீண்டும் திரும்புவதற்காக அல்ல. முன்னோக்கி செல்வதற்காகவே.
 
இன்று (22) ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் இருவர், கல்வி அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம்.
 
அதிபர், ஆசிரியர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைப்பதாகவும், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கல்வி அமைச்சில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தையில் இது குறித்த கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் இதன்போது பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் உட்பட அதிகாரிகளுடன் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.
 
போலியான தொழிற்சங்கங்களை உருவாக்கி அதன் மூலமாக எங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  எமது போராட்டத்தை முடக்க முயற்சிக்கின்றனர்.  எனினும் இந்த போராட்டத்தில் இணைந்து உள்ள 30 ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை - எனத் தெரிவித்துள்ளார்.
 
 
ஜோசப் ஸ்டாலின்
பொதுச் செயலாளர் - இலங்கை ஆசிரியர் சங்கம்
 
joo.jpg
 
 
ஆசிரியர்களும், அதிபர்களும் எந்தவொரு சவாலையும் எதிர் கொள்வதற்கு தயாராகத்தான் ஜனாதிபதி செயலகம் முன்னால் வந்திருக்கின்றனர்.  கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதவியேற்று 11 மாதங்கள் கடந்த போதிலும் தொழிற்சங்கங்களுடன் எவ்விதமான ஒரு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்தநிலையில் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட ஏனைய எங்களுடைய தொழிற்சங்கங்கள் நடவடிக்கையின் மூலமாக அவரை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவருவதற்கு எம்மால் முடிந்தது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் தற்போது அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக கூறியிருக்கின்றார்.  இந்த நிலையில் குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என்பதை இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்தப்பட்டது.  
 
இந்த அமைச்சரவை பத்திரம் மூலமாக எங்களுடைய பிரச்சினை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.  எங்களுக்குத் தேவை இறுதித் தீர்வாகும். அந்த இறுதி தீர்வுக்காகவே நாங்கள் தற்போது தயாராக இருக்கின்றோம்.  இறுதி தீர்வு கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.  எனவே இந்த உறுதியையும், சக்தியையும், இந்த ஒற்றுமையும் நாங்கள் இறுதிவரை கொண்டு செல்வோம் என்று சகோதர சகோதரிகளுடன் நான் கேட்டுக்கொள்கின்றேன். 
 
எங்களுடைய பிரச்சினை தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்வோம். அந்த தீர்மானங்கள் ஒன்றிணைந்து அறிவிக்கப்படும்.  எனவே இந்த போராட்டத்தை நாங்கள் வெற்றியை நோக்கி முன்கொண்டு செல்வதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். அதுவரையில் எங்களுடைய ஒற்றுமையை பாதுகாப்போம். எங்களுடைய ஆசிரியர்-அதிபர் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கட்டும் - என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image