ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை- ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

 ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை- ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கு முறையான செயற்றிட்டமொன்று இவ்வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

900 இற்கும் அதிகமான ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் 1500இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில் திணைக்கள பதில் பொது முகாமையாளர் என அனைத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் பணியாற்றும் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய ஊழியர்களுடன் தொடர்புபட்ட சேவையை மேற்கொள்பவர்கள். குறிப்பாக டிக்கட் வழங்கும் செயற்பாடு நேரடியாக பொதுமக்களுடன் தொடர்புபட்டது. இந்த நாட்களில் போதுமான எண்ணிக்கை பஸ், ரயில் சேவைகள் நடைபெறவில்லை. நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான பயணிகள் ரயில் நிலையங்களில் கூடுகின்றனர், எனவே எமக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே எமக்கு தொற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தோம். எனினும் இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

போக்குவரத்து அமைச்சின் தலையீட்டில் 400 ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவர்களில் 100 பேர் மாத்திரமே ரயில் நிலைய ஊழியர்கள். சிலர் அவரவர் பிரதேசங்களில் தடுப்பூசி வழங்கிய போது பெற்றுக்கொண்டுள்ளனர். தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு ரயில்நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் நிலைய ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கசுன் சாமர தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் காமினி லெக்குகே, அமைச்சின் செயலாளர் மொண்டி ரணதுங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆகியோருடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட முயற்சித்தபோதிலும் அம்முயற்சி தேல்வியடைந்தது. எனினும் ரயில் திணைக்கள பதில் பொது முகாமையாளர் W.A.D குணசிங்கவுடன் தொடர்கொண்டபோது இவ்விடயம் தொடர்பில் சுகாதாரதுறையுடனும் கொவிட் தடுப்பு தேசிய செயற்றிட்ட மத்தியநிலையம் என்பவற்றுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திணைக்கள ரீதியாக ரயில் திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image