சுகாதார தரப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றமாறும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மன்று இன்று (15) கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 10ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் ஊடாக சமூக தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அதேவேளை, பொதுநல வழக்கொன்றினையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இரு வழக்குகளையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்று இன்றைய தினம் சுகாதார தரப்பின் அறிக்கையினை கோரியிருந்தது.
குறித்த இரு வழக்குகளும் மன்றில் எடுத்துக்கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார். இதன்போது ஆடைத்தொழிற்சாலை சார்பில் சட்டத்தரணிகளும் ஆயராகியிருந்தனர்.
நேற்றைய தினம் 14ம் திகதி கரைச்சி பிரதேச சபைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினால் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்தும், தொற்று நோய் கட்டுப்படுத்தலை முறையாக பேணும் வகையிலும் தொழிற்சாலை நிர்வாகம் கடிதம் ஒன்றை பிரதேச சபைக்கு வழங்கியிருந்தது.
குறித்த கடிதத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமிடத்து குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என பிரதேச சபை சார்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். அதற்கு அமைவாக இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததற்கு அமைய குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டு வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை இன்றைய தினம் சுகாதார தரப்பினரை அழைத்திருந்த நீதிமன்று அவர்களது நிலைப்பாடுகளையும் கேட்டறிந்தது.
அதற்கு அமைவாக இன்றைய தினம் மன்றில் சமூகமளித்திருந்த கரைச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மன்றில் ஆடைத்தொழிற்சாலை நிலவரம் தொடர்பிலும், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒத்துழைப்பது இல்லை என்ற விடயத்தினையும் தெரிவித்தார்.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் விபரம், குழுக்களின் விபரம், போக்குவரத்து முறைகள், தங்குமிட விபரம் உள்ளிட்ட விடயங்களை கேட்டிருந்தபோதும் அவர்கள் உரிய நேரத்தில் அந்தத் தகவல்களை தரவில்லை எனவும், விடியல் நிறுவனம் கடந்த 15 நாட்களளவிலேயே வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
அதனால் தனிமைப்படுத்தல் விதிகளை பேண முடியாதுள்ளதாகவும், தொற்றாளர் ஒருவர் பழகிய, அல்லது நெருக்கமானவர்களை அடையாளம் காண முடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது மன்றில் குறிப்பிடப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, சுகாதார வைத்திய அதிகாரியினால் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கட்டளையை இன்று பிறப்பித்திருந்தார்.
தொழிற்சாலை ஊழியர்களின் விபரம், குழுவாக பணி புரிவதானால் குழுக்களின் விபரம் வழங்கும்படியும், குழுக்களில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பிலான தகவலை வழங்குமாறும் மேலும் தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியுள்ள பகுதிகள், போக்குவரத்து முறைகள் உள்ளிட்ட தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிக்க வழங்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டதுடன், குறித்த தகவல்களை உரிய முறையில் இரகசியம் பேணப்படும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி முழுமையாக தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலை ஊழியர்களிற்கான அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்கும்படியாகவும், ஏற்கனவே விபரங்களை வழங்கியுள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிற்கு நாளை பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் அறிக்கையை புதன் அல்லது வியாளக்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு வழங்குமாறும், வானவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றம் பணியாளர்களிற்கான பரிசோதனையை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டு சனிக்கிழமை அறிக்கையை வழங்குமாறும் மன்று கட்டளை இட்டுள்ளது.
அதற்கு அமைவாக குறித்த இரு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிற்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தொழிற்சாலைக்கு பணியில் அமர்த்தக்கூடியவர்கள் தொடர்பான தகவல்களை சனிக்கிழமை தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு வழங்குமாறும், ஞாயிற்றுக்கிழமையின் பின்னர் தொழிற்சாலையை இயக்குமாறும் மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
விடயங்களை தொழிற்சாலைகளிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களிற்கு அமைவாக, அதேவேளை தொழிற்சாலை சுத்திகரிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டம் எனவும் மன்று இன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
இரு தரப்பினரும் குறித்த நடைமுறைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டியுள்ளமையால் குறித்த வழக்கினை முடிவுறுத்துவதாகவும், வழக்கின் தீர்மானத்திற்கு அமைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை மன்றுக்கு எதிர்வரும் 23ம் திகதி அறிக்கையிடுமாறும் மன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதற்கு அமைவாக எதிர்வரும் சனிக்கிழமை வரை கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மாஸ் கோல்டன் நிறுவனத்தின் வானவில் மற்றும் விடியல் எனும் இரு ஆடைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை முதல் தொழிற்சாலைகள் இயங்க உள்ளன.
குறித்த இரு வழக்குகளையும் இருதரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைவாக இன்றைய தினம் மன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Author’s Posts
-
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இன் விசேட அறிவித்தல்
தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட IMEI இயங...ஜன 10, 2025
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்
கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் ம...
ஜன 10, 2025
சம்பள உயர்வு: பெருந்தோட்ட தொழிற்சங்கங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜ...
ஜன 10, 2025
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரிப்பு
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் ப...
ஜன 09, 2025
போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகக் கடு...
ஜன 08, 2025