5 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

5 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

ஊடகவியல் விருதுகள் வழங்கும் இரவு நிகழ்வின் மைல் கல்லாகவுள்ள  வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை இந்த வருடம் 5 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.


நாட்டின் அச்சு ஊடகத்துறையில் மிகச் சிறந்ததைக் கொண்டாடும் மிகச் சிறந்த ஊடகவியல் விருதுகள் வழங்கும் 25ஆவது  நிகழ்வானது கல்கிசை, மவுண்ட் லவனியா ஹோட்டலின்  எம்பயர் பால்றூம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.

 திறமையான, அர்ப்பணிப்புள்ள, விளைவை ஏற்படுத்திய  ஊடகவியலாளர்களைக் கௌரவப்படுத்தும் கால் நூற்றாண்டு மைல்கல்லை இந்த வருடம் குறித்துள்ளது.
விருதுகள் 18 பிரிவுகளில் வழங்கப்படுவதுடன், 5 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறவுள்ளனர்.  இந்த நிகழ்ச்சியானது, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடனும் அதனுடன் இணைந்த இலங்கை பத்திரிகைகள் சபை, இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை தொழில் புரியும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அம்மையப்பாபிள்ளை யோகமூர்த்தி, என்.எம்.அமீன், சந்திரிக்கா விஜேசுந்தர, பென்னட் ரூபசிங்க மற்றும் ஸனிதா கரீம் ஆகியோர் பெற்றுள்ளனர்.

அம்மையப்பாபிள்ளை யோகமூர்த்தி

1970களில் கொழும்பிலிருந்து வெளியாகிய பிரபல தமிழ், நகைச்சுவை சஞ்சிகையாகிய ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் ‘கருத்தோவியங்கள், நகைச்சுவை துணுக் குகள், கட்டுரைகள் மற் றும் கவிதைகளை வெளியிடுவதன் மூலம் இவர் தனது ஊடகப்பணியை ஆரம்பித் திருந்தார். அத்துடன் யாழ்ப்பாணத்திலி ருந்து வெளியாகிய ‘ஈழமுரசு’, ‘சமநிதி’ மற்றும் சில பத்திரிகைகளுக்கும் ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்புகளைச் செய்திருந்தார். பின்னர் இவர் 1984 ஆம் ஆண்டி லிருந்து 1995ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் விவசாய வர்த்தக நிறுவனம் ஒன்றில் கணக்கு இலிகிதர் பின்னர் முகாமையாளராகப் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில் கொழும்புக்கு இடம்பெயர்ந்த இவர் 
1996ஆம் ஆண்டில் ‘வீரகேசரி’ பத்திரிகைக்கு ஆங்கில், சிங்கள மொழிபெயர்புக் கட்டுரைகளை எழுதி வந்தார். பின்னர் 1997ஆம் ஆண்டு ஏப்ரலில்’தினக்குரல்’ பத்திரிகை ஆரம்பித்த காலத்திலிருந்து அதில் ஆசிரியபீட கருத்தோவியராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் இன்று வரை பணியாற்றி வருகிறார்.
இவர் இதுவரையில் சுமார் 5 ஆயிரம் அரசியல் கேலிச் சித்திரங்கள் மற்றும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்புகளை ‘தினக்குரல்’ பத்திரிகையிலும் ‘வீரகேசரி’ பத்திரிகையிலும் வெளியிட்டுள்ளார். 1970களிலிருந்து இக்கட்டான காலகட்டங்களில் அரசியல் கேலிச் சித்திரங்களை மற்றும் கட்டுரைகளை ஆக்கியுள்ளார். இவர் கேலிச் சித்திர படைப்புகளுக்காக 4 விருதுகளையும்  2 கலசப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

சந்திரிக்கா விஜேசுந்தர 

மராபன மகா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்ற சந்திரிக்கா விஜேசுந்தரவின் ஊடகவியல் துறை மீதான ஆர்வம் அவரது பாடசாலை நாட்களிலேயே ஆரம்பமானது. அவர்  1978ஆம் ஆண்டு சுயாதீன பத்திரிகைகள் குழுமமான தவச பத்திரிகையில்  பயிலுனராக இணைந்து கொண்டார். அங்கிருந்து அவர் றிவிரெஸ மற்றும் வார இறுதி பத்திரிகைகள் என்பவற்றில் முதலில் விவரண எழுத்தாளராகவும்  பின்னர் விவரண ஆசிரியராகவும் சுமார் 12 வருடங்கள் சேவையாற்றினார்.  அத்துடன், அவர் தரு ரெஸ்ஸ சிறுவர்கள் அனுபந்தத்தை ஆரம்பித்தார்.

அவர் 1992ஆம் ஆண்டு லங்காதீப பத்திரிகையில் இணைந்து 1992ஆம் ஆண்டில் பிரதி ஆசிரியரானார். அதிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை அவர் சுமார் 30 வருட காலம் டெயிலி லங்காதீப பத்திரிகையில் விவரண ஆசிரியர் பதவி நிலையை வகித்து வாசகர்கள் மத்தியில் அந்தப் பத்திரிகை பிரபலமடைய பரந்தளவில் பங்களிப்புச் செய்தார். 
விஜேசுந்தர மூத்த ஊடகவியலாளர் ஒருவராக மட்டுமன்றி, இளம் வயது வந்தவர்களுக்கான புத்தகங்களுடன் சிறுவர்களுக்கான புத்தகங்களை எழுதியதன் மூலம் சிங்கள இலக்கியத்தின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்த முதுபெரும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளருமாக விளங்கினார். திகிரி கதான்தர, போமது ஹேன யாலுவோ, நாம் கம் உபதா உள்ளடங்கலானவை  பாடசாலைப் பாடத்திட்டத்துக்கு சிபாரிசு செய்யப்பட்ட அவரது பணிகளில் சிலவாகும். அத்துடன், அவரது புத்தகமான பஞ்சலா சஹ பன்சிலா 2024ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுகள் வைபவத்தில் மிகச் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான  புத்தக விருதுக்கு சிபாரிசு செய்யபட்டிருந்தது.
நிஸமுதீன் உடையார் 


மொஹமட் அமீன்
தெஹிவளை, நெடிமலை பிரதேசத்தில் விஜித வீதியில், 21ஆம் இலக்க முகவரியில் வசிக்கும் நிஸமுதீன் உடையார் மொஹமட் அமீன் தனது ஆரம்பக் கல்வியை தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலத்தில் பூர்த்தி செய்து பின்னர் ஹெம்மாதகம அல் அஸார் மத்திய  மகா வித்தியாலத்திலும்  உயர் தரக் கல்வியை மாவனெல்ல, ஸாஹிரா கல்லூரியிலும் கற்றார்.

இதனையடுத்து, 1974ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் கலை இளமாணிப் பட்டத்தை பெற்ற என்.எம்.அமீன் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் அவர் (72 வயது) ஊடகத்துறையிலான தனது அபிமானம் காரணமாக 1976ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் குழுமத்தில் தினமணி பத்திரிகையின் ஆசிரிய பிரிவில் ஒரு 
பயிற்சி  ஊடகவியலாளராக தனது பணியை  ஆரம்பித்தார். அங்கு அவரது பணியின் பயணம் 2007ஆம் ஆண்டு 
வரை தொடர்ந்தது.

அவர், தினகரன் மற்றும் ரி.கே.என். வாரம் அஞ்சலிப் பத்திரிகையில் ஊழிய நிருபராகவும்  பாராளுமன்ற செய்தி ஆசிரியராகவும் அந்தக் குழுமத்தின் அனைத்து தமிழ் வெளியீடுகளுக்கும் முகாமைத்துவ ஆசிரியராகவும் 24 வருட  காலம் சேவையாற்றினார்.
பின்னர் அவர் 2007ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில்  பிறீ லங்கா மீடியா நிறுவனத்தில் நவமணி பத்திரிகையின் பணிப்பாளராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அவர் 1995ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளராக பதவிப் பொறுப்பேற்றதுடன் 1998ஆம் ஆண்டில் அதன் தலைவரானார்.
தெற்கு ஆசிய சுதந்திர ஊடக சங்கத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராக சேவையாற்றிய அவர், 22 வருட காலத்துக்கு மேலாக  இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினராகவுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகம் (ஊடகவியல் டிப்ளோமா கற்கைநெறி), இலங்கை தென் கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை  இதழியல் கல்லூரி மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பவற்றில் வருகை தரும் விரிவுரையாளராக சேவையாற்றினார்..

என்.எம்.அமீன் ஊடகத்துறையில் மட்டுமல்லாது, சமூக சேவையிலும் தன்னை இணைத்துக் கொண்ட ஒருவராகத் திகழ்கிறார். அந்த வகையில் அவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின்  முன்னாள் தலைவராகவும் இலங்கை முஸ்லிம்  பேரவையின் தலைவராகவும் உள்ளார்.
அவர் தனது சேவைக் காலத்தில் பங்களாதேஷ், பூட்டான்,  இந்தியா, ஈரான், ஜப்பான்,  குவைத், மாலைதீவு, நேபாளம், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிரித்தானியா  ஆகிய  நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பென்னெட் ரூபசிங்க
பென்னட் ரூபசிங்க தனது  ஊடகவியல் தொழிலை 1963ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையில்  அடையாள சின்னமொன்றாக விளங்கும் டி.பி. தனபாலவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பித்தார். அடிப்படை செய்தி அறிக்கையிடலில் தேர்ச்சி பெற்ற ரூபசிங்க, விரைவில் தன தவச ஆசிரியர் குழுவில் இன்றியமையாத  உறுப்பினர் ஒருவராக மாறினார்.  1964ஆம் ஆண்டு அவரும் ஏனைய 9 ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செய்திப் பத்திரிகை சட்டம் தொடர்பில் தவச பத்திரிகையின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  அதிலிருந்து வெளியேறினர்.

பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ரூபசிங்க  அதே வருடம் ஆத்த பத்திரிகையில்  நிருபர் ஒருவராக இணைந்து கொண்டார்.  தொடர்ந்து 3 தசாப்த காலத்துக்கு  மேலாக  ஆத்த  ஆசிரியரை குழுவில்  குறிப்பிடத்தக்க வகிபாகத்தை அவர் வகித்தார். அக்கால  கட்டத்தில் அவர்   றிச்சர்ட் விஜேசிறி, பி.ஏ.சிறிவர்த்தன மற்றும் சிறிலால் கொடிகார உள்ளடங்களான பிரபல ஊடகவிலாளர்கள் சகிதம் பணியாற்றினார். அவர் தனது பங்களிப்புகளுக்காக  சகாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரிடமிருந்துமே பாராட்டை வென்றெடுத்தார்.
1994ஆம் ஆண்டில் ஆத்த  பத்திரிகையை விட்டு விலகிய அவர், லேக் ஹவுஸ் வெளியீடுகளில் ஒன்றான தினமினவில் இணைந்து கொண்டார்.  அங்கு செய்தி ஆசிரியராக  தனது பணியை ஆரம்பித்த அவர்  பிரதி ஆசிரியர்,  இணை ஆசிரியர் பதவி நிலைகளுக்கு  உயர்ந்ததனூடாக தினமின  பத்திரிகையின் ஆசிரியாரானார்.

2002ஆம் ஆண்டில் லேக் ஹவுஸிலிருந்து வெ ளியேறிய பென்னெட் தினகரா  மற்றும் பெரலிய போன்ற பத்திரிகைகளுக்கு பங்களிப்புச் செய்தார்.
பின்னர்  அவர் அதனுடன் இணைந்த இணையத்தள ஊடகவியல் துறையைத் தழுவி  லங்கா ஈ நியூஸ் வெப்தளத்தின்  செய்தி ஆசிரியாராக  சேவையாற்றினார். இலத்திரனியல் துறையில் சவால்களை எதிர்காண்ட நிலையிலும் ரூபசிங்க  அனைத்தையும் எதிர்த்து நின்று தனது  தொழிலை தொடர்ந்து மேற்கொண்டார்.
அவர் அடுத்து சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் மௌபிம பத்திரிகையில் குறிப்பிடத்தக்க வகிபாகத்தை வகித்தார். அந்தப் பத்திரிகையின் ஆரம்பத்தில் இணை ஆசிரியராக இணைந்து கொண்ட ரூபசிங்க  ஆசிரியர்,  பணிப்பாளர் மற்றும் ஆலோசகர் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  அவர்  கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 13 வருடங்களை  மௌபிமவுக்காக அர்ப்பணித்து  6 தசாப்தங்களுக்கு மேலான குறிப்பிடத்தக்க பணியை பூர்த்தி செய்தார்.

ஸனிதா கரீம்
ஸனிதா கரீம் 1970களின் இறுதியிலிருந்து  ஊடகவியலில்  உள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில்  இளமாணிப் பட்டம் பெற்றதையடுத்து அவர் தனது ஊடகவியல் தொழிலை ஆரம்பித்தார்.  காலி,  திரு இருதய கல்லூரியின் முன்னாள் மாணவியான அவர் சண் பத்திரிகையில்  பாராளுமன்ற  செய்தியாளராக தனது ஊடகவியல் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் உபாலி நியூஸ் குழுமத்தில் இணைந்து கொண்ட அவர், ஐலன்ட் பத்திரிகையில் 1981ஆம் ஆண்டு  அது ஆரம்பமானது முதல் பணியாற்றினார்.  ஊடகத்துறையிலான  நீண்ட  கால தொழில் அனுபவத்தில் கரீம் பத்திரிகையின் நவநாகரிக மற்றும் சமூகப் பக்கங்களுக்குப் பொறுப்பாகவிருந்து அந்தப் பத்திரிகை  புதிய உயரமொன்றை தொட வழிவகை செய்ததுடன்,  அவர் பயணம் மற்றும் சுற்றுலா  போன்ற  எண்ணற்ற தலைப்புகளில் எழுதியுள்ளார். கரீம் தற்போது த சண்டே ஐலன்ட் பத்திரிகையின்  விவரண  ஆசிரியராகவுள்ளார்.

மூலம் - தமிழ்மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image