பாடசாலைகளில் கடமைப் பொறுப்பில் இருக்கும் பதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹருனி அமரசூரியவை அகில இலங்கை பதில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் எல். லட்சுமணன் தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சில் சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர்.
பதில் அதிபர்களின் பிரச்சினைகள் குறித்த மகஜரை அக்குழுவினர் பிரதமரிடம் கையளித்தனர். இது குறித்து பதில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் எல். லட்சுமணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
“இலங்கையின் கல்வி வளர்ச்சியில் பதில் அதிபர்கள் என்ற பதவி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பதில் அதிபர்கள் என்ற பதவி நிலையில் இருந்து தரம் பெற்றவர்களே அதிபர்களாகவும், கல்வி நிர்வாக சேவையிலும் உயர்பதவிகளை வகித்து வந்துள்ளார்கள். இவ்வாறு பதில் அதிபர்களாக மூன்று வருடங்கள் கடமையாற்றியவர்கள் 2012 ஆம் வருடம் வரையில் அதிபர் சேவைத்தரத்திற்கு உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக 2012 ஆம் வருடம் விசேட தரத்தில் அதிபர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
2012 ஆம் வருடத்தின் பின்னர் பதில் கடமையில் ஈடுபட்டு கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளை கொண்டு நடத்துவதில் மிகுந்த பங்களிப்பை பதில் அதிபர்கள் வழங்கி வந்துள்ளார்கள். இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மூன்றிலொரு பாடசாலைகளை கொண்டு நடத்துவதில் பதில் அதிபர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். தற்போதைய நிலையில் நாடு முழுதும் 1800 இற்கும் அதிகமான பாடசாலைகள் பதில் அதிபர்களின் பொறுப்பிலேயே நிர்வகிக்கப்படுகிறது.
2021 ஆம் வருடம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய கடமையில் இருந்த பதில் அதிபர்களை அதிபர் தரத்திற்கு உள்வாங்கும் நோக்கில் விண்ணப்பம் கோரப்பட்டது. பின்னர் அவ்விண்ணப்பம் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
2017 ஆம் வருடம் அதிபர் போட்டிப் பரீட்சையின் ஊடாக அதிபர்கள் நியமனம் பெற்றார்கள். அப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு கீழ் புள்ளிகளைப் பெற்றவர்கள் தங்களையும் அதிபர் சேவைத் தரத்திற்கு உள்வாங்க வேண்டும் என உயர்நீதிமன்றில் 2018 ஆம் வருடம் வழக்கு தாக்கல் செய்தார்கள்.
இந்நிலையில் பாடசாலைகளை நிர்வகித்து வந்து பதில் அதிபர்களின் நியாயம் வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எதுவித சாதகமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக மனதளவில் மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்கினோம்.
இந்நிலையில் எமக்கு நியாயம் வேண்டி 2023 ஆம் வருடம் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இன்னுமொரு அமைப்பினரும் இவ்விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள்.
மேற்குறித்த வழக்குகள் மற்றும் இவ்விடயத்தோடு தொடர்புபட்ட ஏனைய வழக்குகளையும் இணைத்த வகையிலேயே உடன்பாட்டின் அடிப்படையில் 2018 ஆம் வருடம் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அதிபர் சேவைத் தரத்திற்கு உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் உதவி அதிபர்களாகவே நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் உதவி அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டு பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் பிரயத்தனம் இடம்பெற்றமை கவலைக்குரிய விடயமாகும். நாடு முழுவதும் மூன்று வருடங்களுக்குக் குறைந்த சேவையை வழங்கிய பதில் அதிபர்களிடமிருந்து பாடசாலை நிர்வாகம் மீளவும் பெறப்பட்டது. ஊவா மாகாணத்தில் ஐந்து வருடங்களுக்கு குறைந்த பதில் கடமை புரிந்த அதிபர்களும் பாதிக்கப்பட்டார்கள்.
வடமாகாணத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாகவும் கடமையாற்றிய சகல பதில் அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பாடசாலைகள் பொறுப்பில் இருந்து பெறப்பட்டு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டமை கவலைக்குரியது.
ஊவா மாகாணத்தில் பதில் அதிபர்களை அகற்றும் நடவடிக்கை மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வலயக் கல்விப்பணிப்பாளர்களினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வி அமைச்சின் 16/2017 சுற்றுநிருபத்துக்கு அமைய, 2017 ஆம் வருடம் மார்ச் முதல் பாடசாலை வகைகளுக்கு ஏற்ப மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மத்திய மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடமையாற்றும் பதில் அதிபர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மத்திய மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் பதில் அதிபர்களுக்கும் நிலுவையோடு இக்கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது அவசியம். ஏனைய மாகாணங்களில் சில பாடசாலைகளுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதும் கவனத்திற்குரியது.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளை பாதுகாப்பதிலும், பாராமரிப்பதிலும் மிகுந்த பங்களிப்பை செய்து வரும் பதில் அதிபர்களின் நிலைமையை கருத்திற்கொண்டும் அவர்களது மனநிலையை உணர்ந்தும் பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொண்டு நியாயம் வழங்குமாறு வேண்டுகிறோம்” என்று இக்குழுவினர் பிரதமரிடம் கோரிக்ைக முன்வைத்தனர்.
பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி, நீதி அமைச்சர், நீதி அமைச்சு, சபாநாயகர், அனைத்து மாகாண ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயாலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விசார் தொழிற்சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மூலம் - தினகரன்
(மாவத்தகம தினகரன் நிருபர்)