தொழிலாளர் புலம்பெயர்வில் தாக்கம் செலுத்தும் கடவுச்சீட்டு பிரச்சினை?

தொழிலாளர் புலம்பெயர்வில் தாக்கம் செலுத்தும் கடவுச்சீட்டு பிரச்சினை?

இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு கொள்வனவுக்கான கட்டளைகளை அரசாங்கம் இதுவரை வழங்காததால். கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் நடைபெறவுள்ள கொரிய மொழிப் புலமைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடம் இருந்து கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயமானது எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல எதிர்பார்ப்புடன் உள்ளவர்களினால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்கள் எவ்வித சிரமமும் இன்றி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பக் கோரிக்கைகளை பூர்த்தி செய்யத் தவறினால், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வேறு நாடுகளின் தொழில் சந்தைக்கு மாறும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்த போதிலும், இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தகவலறிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க, கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

மூலம் - லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image