புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதி!
புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட “விகமனிக ஹரசர” நிகழ்ச்சி வடமேற்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் குருணாகல், புத்தளம், அனுராதபுரம், மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடாத்தும் நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் தொழில் முனைவர்களை உருவாக்குவதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பரிந்துரைக்கும் சுயதொழிலை ஆரம்பிக்கத் தேவையான நிதி மூலதனமாக தலா 50,000 ரூபாவையும் ஜனாதிபதி வழங்கினார்.
புலம்பெயர் சமூகத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்தவும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், தேவையான கொள்கைகளை வகுப்பதற்கான கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றதுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடையே சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறியவும் ஜனாதிபதி மறக்கவில்லை.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நாட்டிற்கு அந்நியச் செலாவணி, ஈட்டித்தந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது. இது பரிசு அல்லது அன்பளிப்பு அல்ல. நீங்கள் செய்த சேவைக்கு நீங்கள் பெற்ற உரிமை என்றுதான் கூற வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் பழைய தொழில்களில் ஈடபட சிலர் விரும்புவதில்லை.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அது மாத்திரம் போதாது என்று அவர்கள் நம்புகிறார்கள். அப்படி அர்ப்பணிப்பும் வலிமையும் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, நீங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தீர்கள். அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்றால் நமது பொருளாதாரம் மீண்டு வராது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன்.
எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, எதிர்காலம் இல்லாத நாட்டை நான் ஏற்க வேண்டியதாயிற்று. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும்போது, முதல் சில மாதங்களில் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் பணத்தை அனுப்பவில்லை என்றால், எங்களால் நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்திருக்கும்.
மேலும் சரியான நேரத்தில் உரங்களை வழங்க முடிந்ததால், சென்ற போகங்களில் வெற்றிகரமான அறுவடை கிடைத்தது. இதன்மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. நீங்கள் நாட்டுக்கு அனுப்பிய ஒவ்வொரு டொலருக்கும் மதிப்பு அதிகம். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
உங்களது பங்களிப்பின் காரணமாக கடந்த சிங்கள புத்தாண்டு, வெசாக், பொசன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட எம்மால் முடிந்தது. இந்த நிலையில் இருந்து முன்னேறி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எப்பொழுதும் கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.
இதுவரை நாம் பெற்ற வெளிநாட்டு கடனைத் திருப்பி செலுத்தும் வகையில் சலுகைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதால் மாத்திரம் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.
நமது அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். தேவையான அளவு அந்நியச் செலாவணி கிடைக்கும் வரை கடன் பெறவேண்டியுள்ளது. நாம் கடன் பெறும்போது, நம் கடன் அதிகரிக்கிறது. எனவே, அந்நியச் செலாவணி அளவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு தொழிலுக்குச் செல்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது அவசியம். தொழிலை முடித்துவிட்டு நாடு திரும்பும் போது தொழில்சார் அறிவு கொண்ட தொழில் முயற்சியாளர்களாக உங்களை மாற்றத் தேவையான வேலைத் திட்டத்தைத் தயார் செய்யுமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். நாம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதுடன் சுற்றுலாப் பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இந்தப் புதிய பாதையில் நாடு முன்னேற வேண்டும்.
மேலும், நாட்டில் விவசாயம் முன்னேற வேண்டும். நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
ஒரு நாடாக நாம் அச்சமின்றி முன்னேற வேண்டும். பாரிய அளவிலான நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் அதிகம் வருகிறார்கள். இது ஒரு நல்ல நிலைமையாகும். அதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் அது மாத்திரமின்றி, இந்நாட்டின் சாதாரண மக்களையும் முன்னேற்றுவதே எனது நோக்கமாகும். அதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
அதற்காக ‘அஸ்வெசும’ மற்றும் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் காணி உரிமைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குத் தேவையான கடன்களை வழங்க 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முன்னேறும்போது, கீழ் மட்ட மக்களை முன்னேற்றத் தேவையான திட்டத்தை தயாரித்துள்ளோம்.
நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கும்போது, தமது கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியில் தாம் அக்கறை செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அதேவேளையில், கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். மீண்டும் நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது.
அரசியல் என்பது, பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதோ, முகத்தைப் பார்த்து வாக்களிப்பதோ அல்ல. தமது எதிர்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும். அதன்போது உங்கள் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.