வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோர் பிரச்சினைகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை
வேலை நோக்கில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அலரி மாளிகையில் கடந்த 10ம் திகதி நடைபெற்ற அந்நிய செலாவணி அதிகரிப்பு தொடர்பான செயலணியுடான கூட்டத்தில் இவ்வாலோசனை வழங்கியுள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏதும் தடைகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கு வௌிநாடு செல்வதற்கு விமான இருக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் இதன்போது அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டு விமானசேவை போன்றே வௌிநாட்டு விமான சேவைகளையும் பயன்படுத்தி இப்பிர்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் பணியில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாரிய பங்கு காணப்படுகிறது. எனவே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பது உரிய அதிகாரிகளின் கடமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.