ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையம் கண்டனம்
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை இனந்தெரியாதோரால் கடத்த முற்பட்டதையும் தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது.
இது குறித்து அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
புதன்கிழமை (25) வாகனத்தில் வந்தோர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனைத் தமிழ்ச்செல்வன் எதிர்த்துப் போராடியதை அடுத்து, கடத்தற்காரர்கள் அவரைத் தாக்கி, எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (26.12.2024) மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதியில் நடந்துள்ளது.
எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக ஏற்ற முற்பட்டுள்ளனர். இதை எதிர்த்துத் தமிழ்ச்செல்வன் போராடியபோது, கடத்தற்காரர்கள் தமிழ்ச்செல்வனைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் குறைபாடுகள், மக்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சினைகள், நிர்வாக முறைகேடுகள், ஊழல், சுற்றுச் சூழல் சிதைப்பு, சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள்பாவனை போன்றவற்றுக்கு எதிராக மிகவும் துணிச்சலான முறையில் செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் அளித்து வரும் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலானது, அவருடைய பணிகளை முடக்குவதற்கான உள்நோக்கைக் கொண்டதாக சந்தேகம் கொள்ள வைக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஊடகப் பணியாற்றிவரும் தமிழ்ச்செல்வன், யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பிந்திய காலத்திலும் துணிச்சலாவவும் நேர்மையாகவும் பணியாற்றியவர். இத்தகைய சிறப்பு மிக்க ஊடகவியலாளர் ஒருவரின் மீதான தாக்குதலானது, மக்களுடைய நல் வாழ்வுக்கான எதிர்காலத்தின் மீதான அச்சுறுத்தலாகவே கொள்ளப்பட வேண்டும்.
ஊடகவிலாளர் மீதான இந்தக் கடத்தல் முயற்சியும் தாக்குதலும் ஊடகத்துறையின் சுயாதீனத்துக்கும் ஊடகவியலாளரின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். நாடு புதிய பாதையில் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே பதட்டத்தை உருவாக்குவதோடு ஊடகத்துறைக்கும் பாரிய சவாலை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதேபோன்று அண்மையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்டமைக்கான சரியான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்வதால்தான் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உறுதிய முறையில் உரிய நடவடிக்கையை அரசும் காவல்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்றுள்ளது.