ஜனநாயகத்தை வலுப்படுத்த அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

ஜனநாயகத்தை வலுப்படுத்த அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் அடக்குமுறை கட்டளை சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் சுதந்திர ஊடக இயக்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வலுவான ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது என சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம், புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அதற்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. 'மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான திசாநாயக்கவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அவர் உள்ளிட்ட அரசாங்கம் எவ்வாறு செயற்படுகிறது என்பதிலேயே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என சுதந்திர ஊடக இயக்கம் கருத்து தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களில், மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தின் உயிர்மூச்சை நசுக்கும் வகையில், பல கட்டளைச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஆன்லைன் கணினி பாதுகாப்புச் சட்டம், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மேலும் வரைவு செய்யப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை அடங்கும். சுதந்திர ஊடக இயக்கம் உட்பட பிற ஊடக மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள், பல சந்தர்ப்பங்களில் இத்தகைய அடக்குமுறை கட்டளை சட்டங்கள் - இதில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் அடங்கும் - அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடியாகும் என்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய அடக்குமுறை கட்டளைச் சட்டங்களை இரத்து செய்ய கோரிக்கை விடுத்தன, நீதித்துறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. மேலும் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ரத்து செய்ய வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டது.

இந்த பின்னணியில், அனைத்து அடக்குமுறை கட்டளைச் சட்டங்களையும் இரத்துச் செய்ய கிடைத்திருக்கும் சந்தர்பமானது புதிய ஜனாதிபதிக்கு ஜனநாயகத்திற்கான தனது உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்க கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழு / உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்கவும் சுதந்திர ஊடக இயக்கம் முன்மொழிந்தந்தை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

அரச ஊடகங்களை பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான பிரஜை ஊடகமாக மாற்றியமைப்பதும் சமூக பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட ஊடகவியலில் ஈடுபடுவதற்கு அனைத்து ஊடகங்களுக்கும் தேவையான சீர்திருத்தங்களை முன்மொழிவதற்கு சுயாதீனமான பொறிமுறையொன்றை உருவாக்குவதும் அவசரத் தேவையாகும்.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், சுதந்திர ஊடக இயக்கம் விரிவான ஊடக சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனினும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படை நிபந்தனை என்னவென்றால் அடக்குமுறை கட்டளைச் சட்டங்களை ஒழித்து ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து வடிவிலான குற்றங்களுக்கும் நீதி வழங்குவதும் ஆகும்.

 

ஹனா இப்ராஹீம் லசந்த டி சில்வா
செயலாளர் அழைப்பாளர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image