அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச சேவையின் அடிப்படைச் சம்பளம் கனிஷ்ட தரத்தினருக்கு 24% இலிருந்து 50% வரை அதிகரிக்கப்படும் என சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும், நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதார காரணிகளைக் கருத்திற் கொண்டு 2025 ஜனவரி முதல் மூன்று வருடங்களுக்கு நிலையாக ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்க சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு முன்மொழிந்துள்ளது.

இந்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை மற்றும் திறைசேரியின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய திருத்தத்தின் மூலம் அரச சேவையில் உள்ள மிகக் குறைந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆகவும் வாழ்வாதார கொடுப்பனவுடன் கூடிய மொத்த சம்பளம் ரூ.55,000 ஆகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவை தொழில்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கவே இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாகவும் உதய ஆர் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் அபிவிருத்தியில் அரச சேவை முக்கிய பங்கு வகிப்பதுடன், அது அபிவிருத்திக்கான உந்து சக்தியாகும். தற்போது அரச சேவையில் உள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச ஊழியர்களுக்கான திருப்திகரமான பணிச்சூழலை உருவாக்கும் சிபாரிசுகளையும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உந்து சக்தியாக மாற்றுவதற்கான விரிவான வேலைத் திட்டத்தையும் ஜனாதிபதி சம்பள முரண்பாடுகள் தொடர்பான விசேட குழு முன்வைத்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2025 ஜனவரி முதல், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தலா ரூ.12,500 வழங்குவதற்கும், 2020ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்கவும், அதற்கேற்ப அவர்களின் ஓய்வூதியத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச சேவையின் வினைத்திறனையும் செயற்திறனையும் விருத்தி செய்து மக்களுக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு அரச சேவையில் விஞ்ஞான ரீதியில் வேலை ஆய்வு (Work Study) நடத்தப்பட்டு உரிய வகையில் அரச சேவையை மறுசீரமைப்பதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் தேவைக்கேற்ப அரச சேவையில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படும்.

அரச ஊழியர்களுக்குப் பொருத்தமான செயல்திறன் குறிகாட்டிகளை (KPI) அறிமுகப்படுத்தி அந்த செயல்திறன் முன்னேற்றத்தின் அடிப்படையில் வருடாந்த சம்பள உயர்வு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், அவர்களின் செயல்திறன் முன்னேற்றத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை மற்றும் பிற நிதி அல்லாத பலன்களை வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச வரிக் கொள்கைக்குள் வரி செலுத்துவோருக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் தரமான அரச சேவைக்கான உகந்த அளவிலான அரசாங்க பொறிமுறையை தயார் செய்தவதற்கு, இலங்கை தகுதி வழிகாட்டி (SLQF) மற்றும் தேசிய தொழில் தகுதிகள் (NVQ) அடிப்படையில், போட்டித்தன்மையுடைய ஆட்சேர்ப்பு முறையின் கீழ் அரச சேவையில் ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறை நிறுவப்படும். இது தகுதியானவர்களுக்கு உரிய இடம் அளிக்கும் யுகத்தை உருவாக்கும்.

குறிப்பாக 2025 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் (Digitalization) மற்றும் தன்னியக்கமாக்கலுக்கு (Automation) முன்னுரிமை அளித்து, சாத்தியமான அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தை அரச சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இ- அரச சேவைக்கு (E-Governance) அரசாங்கத்தின் மூலதன முதலீட்டு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பாக, அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முதல் அரச அமைச்சுகள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள் வரை, டிஜிட்டல் அரச சேவையை செயல்படுத்துவதன் மூலம் சிறந்த அரச சேவையை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

பல ஆண்டுகளாக அரச திறைசேரியை நம்பியிருக்கும், அதேபோன்று, பாரம்பரிய திணைக்கள மாதிரியிலிருந்து விடுபட்டு, நவீனமயப்படுத்தப்பட்ட தொழில் முயற்சியாளர் மாதிரியாக மாற்றி, அனைவருக்கும் பயனளிக்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்ட அரச நிறுவனங்களை மாற்றவும் அடுத்த மூன்று வருடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த நிறுவனங்களின் பங்கு உரிமையில் 30% அரசாங்கத்திடமும், 30% முதலீட்டாளர்களிடமும், 30% பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலமும் பொது மக்களிடமும், 10% நிறுவன ஊழியர்களுக்கு உரிமையாகும். மிகவும் ஜனநாயக நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட பொது மக்கள் நிறுவனங்களாக (Public Quoted Company) அமைக்கப்பட்ட நிறுவன குழுமங்களாக உருவாக்கப்படும்.

அந்த நிறுவனங்களின் சேவைக்கு பணியமர்த்தப்படும், ஓய்வூதிய உரிமையுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தற்போதைய ஓய்வூதியத்தை தள்ளிப்போட்டு, அவர்களின் வயது 60ஐ எட்டிய பிறகு, ஓய்வூதிய உரிமை பெறுவதோடு, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் காலத்தில் ஏனைய சலுகைகளைப் பெற உரிமை உண்டு.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலம் சில அரச சேவைகளை வெளிப்புற சேவை வழங்குநர்களிடமிருந்து பெறுவதன் மூலம் உகந்த செயல்திறன் முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது தேவையற்ற பணியாளர்களை அரச சேவையில் சேர்ப்பதை மந்தப்படுத்துவதோடு, மிகவும் பயனுள்ள சேவைகளை மேம்படுத்த அனுமதிக்கிறது. இது பொருளாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்தும்.

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையிலும், அரச ஊழியர்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதித் திட்டம் மறுசீரமைக்கப்படும். அதன்படி, ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஒவ்வொரு அரச ஊழியர்களுக்கும், மாதந்தோறும் ரூ.1,000 பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மருத்துவப் பலன்கள் காப்புறுதித் திட்டத்தின் மூலம் அதிகபட்ச பலன்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அக்ரஹார திட்டத்தை செயல்படுத்தும் தேசிய காப்புறுதி நிதியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மருத்துவமனைகளில் அரச ஊழியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வசதிகளை கட்டம் கட்டமாக மேம்படுத்துவதன் மூலம், தேசிய மருத்துவமனை கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வசதிகளை வழங்கும் திட்டமும் ஊக்குவிக்கப்படும்.

இலவசக் கல்வியில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர் மற்றும் சிறந்த மனித வளம் காரணமாக தற்போது வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு உள்ள கேள்வி காரணமாக, தற்போது இலங்கையர்கள் தொழிலுக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது வழமையாக உள்ளது. எனவே, இலங்கை பெறுமதிமிக்க மனித வளத்தை இழக்கும் அதேவேளையில் வெளிநாட்டுக் கல்விக்காக பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு இழுக்கப்படுகிறது.

இலவச உயர்கல்வி வழங்குவதற்கான வரம்புகளுக்குள், வாய்ப்புள்ள ஏராளமான மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு பெற்றோர் அதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. போதிய பொருளாதார நன்மைகள் இல்லாத காரணத்தினால் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்றது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக, இலவச உயர்கல்வியைப் பாதுகாத்து, பல்கலைக்கழகங்களுக்கு சட்ட மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்கவும், அவற்றின் பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி நியாயமான அடிப்படை கொண்ட பொருளாதார செலவுகளுடன் கற்கைகளை நடத்த இடமளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன் மூலம், மேலதிக வருமான வழிகள் அதிகரிப்பதோடு, அனைத்து தரப்பினரும் நன்மைகளைப் பெறுவார்கள்.

இந்த முறையை மிகவும் திறம்பட உருவாக்கி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், சர்வதேச மாணவர்கள் இலங்கையில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்ற முடியும். இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முன்னணித் துறையாகவும் இதனை உருவாக்க முடியும்.

இலங்கையில் இலவச சுகாதார சேவைகள் நிறுவப்பட்டதன் காரணமாக, சுகாதார குறிகாட்டிகளில் இலங்கை சிறந்த நிலையை அடைந்துள்ளது. எனவே, இலங்கையின் சுகாதார மற்றும் சுகாதார நிபுணர்களுக்கான சர்வதேச அங்கீகாரமும் அதிகரித்துள்ளது.

ஆனால் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் இலங்கை சுகாதார நிபுணர்களுக்கான சர்வதேச கேள்வி அதிகரித்துள்ளதுடன், அதன்படி அவர்கள் வெளிநாடு செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை மாற்றுவதன் மூலம், இலங்கையில் இலவச சுகாதார சேவையை மேலும் சிறப்பானதாக்கி, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவையை வழங்கும் மத்திய நிலையமாக மாறுவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, இலவச சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் பாதுகாக்கப்படும் வகையில் முகாமைத்துவம் செய்து பொருளாதாரச் செலவின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கான உத்திகள் தொடங்கப்படலாம்.

ஏற்கனவே சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சுகாதார சேவையை மீள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேமுறையைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவச் சேவைகளையும் பொருளாதாரப் பலன்களை மேம்படுத்தக்கூடிய ஒரு பகுதியாக மாற்ற முடியும்.

குறிப்பாக சுகாதாரத்துறை சார்ந்த சுற்றுலாத்துறையில் முன்னணி மையமாக விளங்கும் இலங்கையின் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

திறைசேரியின் பதில் செயலாளர் ஏ.கே.செனவிரத்ன மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image