சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி

"தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இந்நாட்டின் ஆசிரிய சமூகம் சாதகமான பங்கை ஆற்றி வருகின்றது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் தியாகம் செய்து பெருந்தொகையான மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்களைத் திறக்க அவர்கள் செய்து வரும் பணியை நான் நன்றியுடன் பாராட்டுகிறேன்."

_ சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வௌியிட்டுள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, மேலும் தெரிவிக்கையில்,

நான் கல்வி அமைச்சராக இருந்த போது இந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு சலுகைகள் பலவற்றை என்னால் வழங்க முடிந்தது. , தரப்படுத்தப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் ஆசிரியர் கலாசலைகளை நிறுவுவதற்கும் அரசியல் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிரியர் நியமனங்கள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களை கல்விச் சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவந்து கல்வி நிர்வாகத்தை நிலைநிறுத்தவும் நான் எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூருகின்றேன்.

மேலும், ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்கும் டெலிக் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளை ஆசிரியர் தொழிலின் முன்னேற்றத்துக்காகச் செயல்படுத்த என்னால் முடிந்தது.

வளர்ச்சியடைந்த உலகத்துடன் போட்டியிடக் கூடிய மாணவச் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான பல மறுசீரமைப்புகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதோடு ஆசிரியரின் பங்கு அபிவிருத்தி ரீதியில் எவ்வாறு மாற வேண்டும் மற்றும் ஆசிரியர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது குறித்து ஆராய்வது மிகவும் உகந்தது என்று நான் கருதுகிறேன்.

அனைத்து ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகம் அவர்களுக்கு வழங்கக்கூடிய உயர்ந்த பாராட்டையும் மரியாதையையும் அவர்களுக்கு வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளேன் என்பதை சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் தற்போதைய நிலையில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்களைத் திறந்து , அறிவும் நற்பண்புகளும் நிறைந்த நல்ல எதிர்கால சந்ததியைக் கட்டியெழுப்பும் மாபெரும் பணியில் முன்னோடிப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர் சந்ததிக்கும் சர்வதேச ஆசிரியர் தினத்தில் கௌரவம் செலுத்துவதோடு அவர்களை மனமாற வாழ்த்துகிறேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image