ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்படவுள்ள அநீதியை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்படவுள்ள அநீதியை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளது. அதனை உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பலருக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளதாக நான் உணர்கிறேன். இது தொடர்பான தகவல்களை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் தலையிட்டு, கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கல்வி அமைச்சின் 01/2016 சுற்றறிக்கைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் 2,383 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை விட பின்வருவனவற்றின் அடிப்படையிலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் 637 ஆசிரியர்கள் பதில் கடமை புரியும் அதிபர்களாக செயற்படுகின்றனர். எனினும், கணக்கெடுப்பில் இவர்கள் ஆசிரியர்களாக கருதப்படுகின்றனர்.

பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பதில் ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள் போன்ற பதவிகளில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களும் ஆசிரியர்களாகவே கணக்கெடுக்கப்படுகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சம்பளமற்ற விடுமுறையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்றுள்ளனர். இவர்களும் கிழக்கு மாகாண ஆசிரியர் பட்டியலில் உள்ளனர்.

2016க்குப் பின்னர் இன்று வரை கிழக்கு மாகாணத்தில் பல புதிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் தரம் 11 வரை தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும், தற்போது அமுலில் உள்ள ஆளணி சுற்றறிக்கைக்குள் இவற்றுக்கு தேவையான ஆசிரியர் விபரம் உள்வாங்கப்படவில்லை. 

அதன்படி கணக்கிட்டால், மேலே குறிப்பிட்டவாறு 2,383ஐ விட இன்னும் 1,300க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளன.

மேலும் செய்திகள் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்

ராஜகுமாரியின் மரணம்: பொலிஸ் அதிகாரிகளை கைதுசெய்ய வலியுறுத்தல்

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து மன்னிப்புச் சபை கரிசனை

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் பட்டியலின்படி, கிழக்கு மாகாணத்துக்கு 512 பேரின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர். இதிலுள்ள அநீதியை தங்கள் முன் வைக்கிறேன்.

கிழக்குக்கு வந்துள்ள பெயர்ப் பட்டியலின்படி, எந்தவொரு விஞ்ஞான ஆசிரியரும் கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்படவில்லை. எனினும், திருகோணமலை கல்வி வலயத்தில் 18 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 10 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 22 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 2 விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 52 விஞ்ஞான ஆசிரியர்களுக்கு வெற்றிடம் உள்ளது.

அதேபோல தமிழ்மொழி பாடத்துக்கு திருகோணமலை கல்வி வலயத்தில் 31 ஆசிரியர்களுக்கும், கிண்ணியா கல்வி வலயத்தில் 31 ஆசிரியர்களுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 9 ஆசிரியர்களுக்கும், கந்தளாய் கல்வி வலயத்தில் 6 ஆசிரியர்களுக்கும், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் 1 ஆசிரியருக்கும் என வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 78 தமிழ் பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் பாட ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று இன்னும் பல பாடங்களுக்கு பல பாடசாலைகளில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்படவுள்ளமை மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும்.

7 வருடங்களுக்கு முன்னைய சுற்றறிக்கையின்படியான கணக்கெடுப்பை மையமாக வைத்து தற்போது நடவடிக்கை எடுப்பது கல்வித்துறை எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இது ஜனாதிபதி, கல்வித்துறை மூலம் நாட்டின் மறுமலர்ச்சியை ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைக்கு பாரிய தடையாக இருக்கும் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

எனவே, இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட சகல ஆசிரியர்களையும், கிழக்கு மாகாணத்துக்கே நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சார்பாக தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image