அரச உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான பணம் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கல்வி, பயிற்சி, கலந்துரையாடல், மாநாடு உள்ளிட்ட திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது நாளொன்றுக்கு 40 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்கள் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ பணிகளுக்காக அல்லது வேறு வெளிநாட்டு பணிகளுக்காக அரசு சார்பில் வெளிநாடு செல்லும்போது ஒரு நாளைக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவை 40 அமெரிக்க டொலராக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த கொடுப்பனவுகளை செலுத்துகையில் நாடுகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாவது வகை நாடுகளின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் 30% இனால் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள், மாநகர முதல்வர்கள், மேயர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவார்கள்.
மேலும், உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய வழங்கப்பட்ட 750 அமெரிக்க டொலர்கள் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 ஆம் திகதி முதல் இந்த செலவுகளைக் கட்டுப்படுத்தும் முடிவு அமுல்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.