அரச ஊழியர்களின் கடமை தொடர்பில் ஆளுநர் வௌியிட்ட கருத்து

அரச ஊழியர்களின் கடமை தொடர்பில் ஆளுநர் வௌியிட்ட கருத்து

அரசாங்க ஊழியர்கள் என்றால் காலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து மாலை 5 மணிக்கு வீடு செல்லும் நபர்களாக நியமனம் பெறக் கூடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு புது வருடத்தின் பணிகளை ஆரம்பித்தன் பின் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர்; "நமது நாடு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இது அரசியல் நெருக்கடி என்று நினைக்க வேண்டாம். பொருளாதார நெருக்கடியும் இதிலுள்ளது. இதிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப எவரேனும் எதுவும் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. மக்களுக்கு சேவை செய்ய நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். நாட்டின் ஒன்பது பங்குகளில் ஒன்று நமக்குரியது. அதனை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.

விவசாயத்துறையில் நாட்டிற்கு நமது கிழக்கு மாகாணம் அதிக பங்களிப்புக்களை வழங்குகிறது. இயற்கை வளங்கள் நமது மாகாணத்தில் தான் காணப்படுகிறது. அதன் மூலமாக மேற்கொள்ளப்படும் கைத்தொழிலினால் நாம் அதிகூடிய நன்மைகளை அடைந்துகொள்ள வேண்டும்.

அபிவிருத்திக்கு இன வேறுபாடு சம்பந்தமில்லை. நாம் அனைவரும் பொருளாதார அபிவிருத்தியின் கட்டமைப்புக்குள் வரவேண்டும். அவ்வாறாயின் மாத்திரமே இப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இன்று உணவுப் பற்றாக்குறையைப் பற்றிப் பேசுகிறார்கள். நமது மாகாணத்தில் ஒரு குழந்தைக்காவது சாப்பிட முடியாது போகுமாயின் நாம் அனைவரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும்" என ஆளுநர் அனுராதா யஹம்பத் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்னாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பி. மதநாயக, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மூலம் - நியூஸ்.எல்.கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image