மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையக எம்.பிக்களையும் ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்க வேண்டும்

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையக எம்.பிக்களையும் ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்க வேண்டும்

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வட மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது போன்று, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையக எம்.பிக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வடக்கில் உள்ள அரசியல்வாதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள ஜனாதிபதி கிழக்கில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்களையும் இணைத்துக் கொண்டு அந்த பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே வேளை, மலையக மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக மலையகப் பகுதி அரசியல்வாதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நுவரெலியா மாவட்ட விவசாய சமூகத்தினர், தமது மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான உரம் இல்லாது பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. ஒரு கிலோ கரட்டின் விலை, உற்பத்தி செய்யும் இடத்திலேயே நானூறு ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அது ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்போது மக்கள் எவ்வாறு அதனை விலை கொடுத்து வாங்க முடியும்?

எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைவடையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. 

இதனால், நாட்டு மக்களில் நடுத்தர வர்க்கத்தினர், கீழ் மட்டத்துக்கும் கீழ் மட்டத்திலுள்ளோர் பிச்சைக்காரர்களாகும் நிலையே ஏற்பட்டுள்ளது.

கஞ்சாவுக்கும், கறுவாவுக்கும் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை தேயிலைக்கு வழங்கப்படவில்லை. தேயிலை உற்பத்தி குறைவடைந்துள்ளதால் தேயிலை விலை அதிகரித்துள்ளது. ஆனால் உண்மையில் தேயிலை உற்பத்திக்கு தேவையான உரம் இல்லாமையையே விலை அதிகரிப்புக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து அடுத்த வருடத்தோடு 200 வருடங்களாகின்றன. எனினும், 200 வருடம் கடந்தும் லயன் அறைகளிலேயே இவர்கள் இப்போதும் வாழ்கின்றனர்.

சுகாதாரம், கல்வி பொதுவான மலசல கூடம், பாடசாலைகளுக்கு செல்வதில் அதிக தூரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்கின்றனர். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலையகத்திலும் பல பிரச்சினைகள் உள்ளன. மலையக பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image