மில்லனிய பாடசாலை அதிபர் பணி இடைநீக்கம்

மில்லனிய பாடசாலை அதிபர் பணி இடைநீக்கம்

ஆசிரியர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் சிலரை தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரணை - மில்லனிய பகுதி பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேல் மாகாண கல்வித் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பாடசாலை ஆசிரியை ஒருவருக்கும், மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. மில்லனிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியை ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி பாடசாலை ஆசிரியர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், ஆசிரியர்களே மாணவர்களை காவல்துறையிடம்  ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை ஜீப் வாகனத்துக்குள் மின்சாரம் பாய்ச்சி மாணவர்களை காவல்துறையினர் மிரட்டி அழைத்துச் சென்று மீண்டும் பாடசாலையில் இறக்கி விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

சிறுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - சூரியன் செய்திகள் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image