ஆசிரியைகளுக்கான ஆடை முறைமை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஆசிரியைகளுக்கான ஆடை முறைமை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஆசிரியைகளுக்கான ஆடை முறைமையில் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

அரச சேவையின் கௌரவத்தை பேணும் வகையில், அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை, ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

 

இதற்கமைய, புடவை மற்றும் ஒசரி அணிய சிரமத்திற்கு உள்ளாகும் ஆசிரியர்கள், இலகுவான ஆடை அணிவதற்கான அனுமதியைக்  கோருவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான ஆடை முறைமையில் எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.

 

42 இலட்சம் மாணவர்களின் ஒழுக்கத்துடன் பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளையே மாணவர்கள் பின்பற்றி செயற்படுகின்றனர்.

 

எனவே, எந்த தரப்பினர் கோரிக்கைளை முன்வைத்தாலும், பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆடையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது.

 

மேற்கத்தேய நாடுகளுக்கு தேவையான வகையில் இலங்கையின் ஆடையை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். வேறு எதனை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

 

99 சதவீதமான ஆசிரியைகள் குறித்த மாற்றத்துக்கு விருப்பமில்லாமல் உள்ளனர். எமது கலாசாரத்தை அவ்வாறே பேணி, மாணவர்களை ஒழுக்கத்துடன் வளர்க்கவேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image