பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டையை மீள ஆரம்பிக்க வேண்டும் - சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து வேட்டையை மீள ஆரம்பிக்க வேண்டும் - சுமந்திரன்

பயங்கரவாத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும், அவ்வாறு நீக்கப்படும் வரையில் அச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே

இப்போது அதனை மீறிச்செயற்படும் நிலையில், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குங்கள்' என வலியுறுத்தித் தாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவந்த கையெழுத்துவேட்டை பிரசாரத்தை மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய உடனடித்தேவைப்பாடு ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி பயங்கரவாத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டுமென வலியுறுத்துகின்ற கையெழுத்துவேட்டை பிரசாரம் நேற்றைய தினத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவித்த எம்.ஏ.சுமந்திரன், இந்நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரும் இப்பிரசாரத்திற்குத் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாத்தடைச்சட்டம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அச்சட்டம் இல்லாதொழிக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் அதற்காகத் தாம் முன்னெடுக்கவிருக்கின்ற நடவடி;ககைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான பவானி பொன்சேகா, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகள் இணைந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் கூறிய விடயங்கள் வருமாறு:

'பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குங்கள்' என்ற பிரசாரம் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான தீர்மானத்தில் கையெழுத்துக்கோரும் நடவடிக்கையை நாம் முன்னெடுத்ததுடன் அதில் பெருமளவானோர் கையெழுத்திட்டனர். அதற்காக நாம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்றோம். 

இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய தீவிர எரிபொருள் நெருக்கடியின் விளைவாக அப்பிரசாரத்தை இடைநடுவில் கைவிடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்ற சூழ்நிலையில், நாம் ஏற்கனவே முன்னெடுத்துவந்த கையெழுத்துவேட்டை பிரசாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

கடந்த 1979 ஆம் ஆண்டில் ஓர் தற்காலிக சட்டமாக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம், அதன் பின்னர் சுமார் 40 வருடகாலமாக நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் சட்டமாக மாறியிருக்கின்றது. ஆனால் பயங்கரவாத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட முறை மற்றும் அதன் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அது அரசியலமைப்பிற்கு முரணானதொரு சட்டமென அப்போதே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 

எனவே அச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டுமென மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பல வருடகாலமாகத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் விளைவாக நாம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ப்ரூசேல்ஸுக்கு சென்று பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படுமென உத்தரவாதமளித்ததன் பின்னரேயே இலங்கைக்கு அவ்வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

 அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் அச்சட்டத்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். குறிப்பாக இவ்வாரத்தொடக்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் 3 தடுப்புக்காவல் உத்தரவுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தற்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

ஆகவே பயங்கரவாத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவந்த பிரசாரத்தை மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய உடனடித்தேவைப்பாடு தோற்றம்பெற்றிருக்கின்றது. 

அதன்படி இந்நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரும் நாம் இன்றைய தினத்திலிருந்து (நேற்று) மீள ஆரம்பிக்கவிருக்கும் கையெழுத்துவேட்டை பிரசாரத்திற்குத் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image