ஹோட்டல் துறையை மேம்படுத்த எவ்வித திட்டமும் இல்லை- ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம்

 ஹோட்டல் துறையை மேம்படுத்த எவ்வித திட்டமும் இல்லை- ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம்

 தனது சுயலாபத்துக்காகவே தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ பதியேற்றுள்ளார் என்று நிறுவனங்களுக்கிடையிலான ஊழியர் சங்கத்தன் ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்போது பாரிய வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றும் அம்மத்திய நிலையம் கவலை வௌியிட்டுள்ளது.

உள்நாட்டு ஆங்கில பத்திரிகையொன்று வழங்கியுள்ள செவ்வியில் குறித்த மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “சுற்றுலா அமைச்சர் இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாது. பெர்னாண்டோ தனது தனிப்பட்ட நலனுக்காக அமைச்சு ஒன்றைக் கைப்பற்றி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டு வந்த சக்திவாய்ந்த எதிர்ப்பை இல்லாதொழிக்க பங்களிப்பு வழங்கியுள்ளார்.

இப்போது, அவர் மக்களின் குரலைக் கேட்கவில்லை. குறிப்பாக சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் அவரிடமில்லை. அவர் தொழிற்சங்கங்களுடனோ அல்லது சுற்றுலாத் துறையில் அனுபவமுள்ள பிற தரப்பினருடனோ எவ்வித ஆலோசனைகளும் நடத்தவில்லை. கட்சிகளுடனோ குறைந்தபட்சம் ஆலோசனை நடத்தவில்லை.

நாட்டிற்கு நேரடியாக அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டக்கூடிய சுற்றுலாத் துறையானது, நிலவும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து கிட்டத்தட்ட முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹோட்டல்கள் மற்றும் இதர சுற்றுலா சேவை வழங்குநர்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களும் மூடப்படும் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

"சுற்றுலா போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் மற்றும் மின்சாரத்தை சார்ந்துள்ளது, ஆனால் இந்த நேரத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் இல்லை. சுற்றுலாத் துறைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாதபோது, அரசாங்கம் எப்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்தி நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிக்க முடியும்? அரசு இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று சொன்னால், அவர்கள் கண்டிப்பாக நம் நாட்டிற்கு வருவார்கள். ஆனால், அரசாங்கம் செய்து கொண்டிருப்பது வெறும் கதைகள் மட்டுமே” என்று அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட மொத்த வீழ்ச்சியால் 200,000 நேரடித் தொழிலாளர்கள் மற்றும் 400,000 மறைமுகத் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 600,000 தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மேலும், இந்த சரிவால் நாட்டிற்கு ஆண்டு வருமானத்தில் மில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வை வழங்குமாறு கோரி, ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம் நேற்று (30) கொழும்பில் பல ஹோட்டல்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை நாடளாவிய ரீதியில் இவ்வாறான தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ரணசிங்க தெரிவித்தார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image