நடைமுறைக்கு வந்துள்ள தொழிற்துறையுடன் தொடர்புடைய முக்கிய சட்டம்

நடைமுறைக்கு வந்துள்ள தொழிற்துறையுடன் தொடர்புடைய முக்கிய சட்டம்
கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் உள்ளிட்ட 3 மூன்று சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரைப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு கடந்த 23ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.

கைத்தொழிற் பிணக்குகள் தீர்ப்பதில் நீதவான் நீதிமன்றங்களில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்கு தொழில் நியாய சபைகளின் தலைவர்களை மேலதிக நீதவான்களாக கருதுவதற்கும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தினால் 1979 ஆம் ஆண்டு 15 இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தில் 442 ஆம் பிரிவு திருத்தப்படுவதுடன் வழக்கு ஒன்றின் ஒவ்வோர் தரப்பினருக்கும் தீர்ப்பின் அல்லது வழக்கு அறிக்கையின் கட்டளையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றை கட்டணமின்றி வழங்குதல் இடம்பெறுகின்றது.
 
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தினால் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்துக்கு 154(அ) எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுவதுடன் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் விதிமுறைப்பட்ட எண்பிப்பிலிருந்து குறித்த சில ஆவணங்களை விலக்களிப்பதும் இடம்பெறுகின்றது.
 
அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2022 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம், 2022 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க கைத்தொழிற் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image