படையினரை கொண்டாவது போக்குவரத்து வசதிகளை வழங்குங்கள் - அகில இலங்கை தாதியர் சங்கம்

படையினரை கொண்டாவது போக்குவரத்து வசதிகளை வழங்குங்கள் - அகில இலங்கை தாதியர் சங்கம்

கடந்த 9ம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தாதியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த எழுதிய கடிதத்தில் தாதியர் உட்பட தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையான சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதில் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். சேவைக்கு சமூகமளிக்கும் ஊழியர்கள் அவர்களுடைய வீடுகளுக்கும் தங்குமிடங்களுக்கும் மீள செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர்கள், தங்குமிடம், உணவு, உடை போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

போதிய ஊழியர்கள் இன்மையால் நோயாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என்பவற்றில் சேவையை முன்னெடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நிலையில் வைத்தியசாலை பிரதானிகள் இல்லை. பஸ்களை ஏற்பாடு செய்தல், எரிபொருள் ஏற்பாடு செய்தல், அம்பியுலன்ஸை பயன்படுத்தி ஊழியர்களை சேவைக்கு அழைத்து வருவது தொடர்பில் உயரதிகாரிகள் ஆலோசனை வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலைமைகளை கருத்திற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். அனைத்து வைத்தியசாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினரை கொண்டாவது போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து வழங்குமாறு கோருகிறோம். அதேபோல் வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாகன வசதியுள்ள ஊழியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதேபோல், இதுவரை சேவைக்கு சமூகமளிக்க முடியாத நிலையில் உள்ள ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image